ECONOMYHEALTHSELANGOR

சிலாங்கூர் சாரிங் திட்டத்தை ஏற்பாடு செய்வதில் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவீர்- மாநில பிரதிநிதிகளுக்கு கோரிக்கை

கோல சிலாங்கூர், ஜூன் 13 – சிலாங்கூர் சாரிங் சுகாதார பரிசோதனைத் திட்டத்தை ஏற்பாடு செய்வதில் ஆக்கப்பூர்வமாக செயல்படுமாறு மாநிலப் பிரதிநிதிகளை சிலாங்கூர் பொது சுகாதார ஆலோசனைக் குழு (செல்ஃபாக்) வலியுறுத்தியுள்ளது.

இத்தகைய நடவடிக்கையின் மூலம் சுகாதாரத் திட்டத்தில் அதிகமானோர்  பங்கேற்பதற்கும் தங்கள் உடல்நிலை குறித்து அதிக விழிப்புணர்வை அவர்கள் பெறுவதற்கும் ஆர்வத்தைத் தூண்டும் அதன் குழு உறுப்பினர் டாக்டர் மொஹமட் ஃபர்ஹான் ருஸ்லி  என்றார்.

உதாரணத்திற்கு, பெர்மாத்தாங் தொகுதியை எடுத்துக்கொள்ளுங்கள்.  அதன்  சட்டமன்ற உறுப்பினர் மக்களுக்கு மாநில அரசின்  பல்வேறு திட்டங்களை  பிரபலப்படுத்துவதற்காக முகப்பிடங்களை அமைக்க மாநில அரசு நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளார்.

அவ்வாறு செய்வதன் மூலம் அதிகமான மக்கள் இத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஒரு மணி நேரத்திற்குள் 100 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை நாங்கள் பெற்றுள்ளோம், மேலும் அதிகமான மக்கள் தங்கள் உடல்நிலையை பரிசோதிக்க வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்  என்றார் அவர்.

நேற்று,  கம்போங் ஸ்ரீ திராம் சமூக மண்டபத்தில் நடைபெற்ற  சிலாங்கூர் சாரிங் மருத்துவ பரிசோதனைத் திட்டத்தில் சந்தித்தபோது  அவர் இவ்வாறு கூறினார்.

சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவத் திட்டத்திற்கு மாநில அரசாங்கம் 34 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.இத்திட்டத்தின் மூலம்  39,000 பேர் வரை பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலம் முழுவதும் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெறும் இத்திட்டத்தில் பொதுவான உடல் பரிசோதனை, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, கண் பரிசோதனை, புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

 


Pengarang :