ECONOMYSELANGOR

உணவு நெருக்கடியைத் தவிர்க்க குறுகிய காலப் பயிர்த் திட்டம்- பி.கே.பி.எஸ். நடவடிக்கை

ஷா ஆலம், ஜூன் 13- உணவு நெருக்கடியை எதிர்கொள்வதற்கான நீண்ட கால நடவடிக்கையாக குறுகிய காலப் பயிர்களைப் பயிரிடுவதற்காக விவசாய நிலங்களின் பயன்பாட்டை கூடிய பட்சம் உயர்த்துவதற்கு சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) முயற்சி மேற்கொண்டு வருகிறது.

எதிர்காலத்தில் காய்கறிகளின் விலையேற்றத்தினால் பாதிக்கப்படாமலிருப்பதற்காக இத்திட்டத்தில் பொது மக்களும் பங்கெடுக்க ஊக்குவிக்கப்படுவதாக அக்கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது ராஸி கூறினார்.

கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் அடுத்த ஏழு ஆண்டுகளை எதிர்கொள்ள ஏழாண்டு வியூகத்தை நாங்கள் வரைந்துள்ளோம். விவசாய நிலத்தின் பயன்பாட்டை கூடுமானவரை அதிகரிப்பது மற்றும் காலியாக உள்ள நிலங்களில் குறுகிய காலப் பயிர்களை எங்களுடன் இணைந்து பொது மக்களும் பயிரிட ஊக்குவிப்பது ஆகியவை அந்த வியூகங்களில் அடங்கும் என்று அவர் சொன்னார்.

காய்கறிகள் விலை உயரும் பட்சத்தில் குறைந்தபட்சம் நாம் இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்று ஆஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டுக் கோழிகளுக்கு பெரிதும் சார்ந்திருப்பதை தவிர்ப்பதற்காக கோழிப் பண்ணைகளை தாங்கள்  விரிவுபடுத்தவுள்ளதோடு இவ்விவகாரத்தில் கோழிப் பண்ணையாளர்களுடனும் ஒத்துழைக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் கோழிகளை நாம் பெரிதும் சார்ந்திருப்பதை தவிர்ப்பதற்கு உருவாக்கும் ஒருங்கமைப்பு இதுவாகும் என்றார் அவர்.

கோழி தீவனம் மற்றும் குறுகிய காலப் பயிர்களை குறைந்த விலையில் உருவாக்குவதற்கான ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளை தமது தரப்பு தீவிரப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :