ECONOMYNATIONAL

மலேசிய சட்டத்தில் மரண தண்டனை தொடர்ந்து இருக்கும்- கட்டாய மரண தண்டனை மட்டுமே நீக்கம்

புத்ரா ஜெயா, ஜூன் 13– கட்டாய மரண தண்டனையை அகற்ற அரசாங்கம் இம்மாதம் 8 ஆம் தேதி முடிவெடுத்த போதிலும் மலேசிய சட்டத்தில் மரண தண்டனை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று நாடாளுமன்றம் மற்றும் சட்டத்துறைக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜூனைடி வான் ஜாபர் கூறினார்.

கட்டாய மரண தண்டனையை அகற்ற அரசாங்கம் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளதோடு அதற்கு மாற்றாக நீதிபதியின் விவேகத்திற்குட்பட்டு வேறு தண்டனைகளை வழங்கலாம் என்று அவர் சொன்னார்.

கட்டாய மரண தண்டனையை அகற்றுவதற்கு அரசாங்கம் கடந்த ஜூன் 8 ஆம் தேதி கூடிய அமைச்சரவையின் வாயிலாக கொள்கையளவில் இணக்கம் தெரிவித்தது. எனினும், நீதிமன்றத்தில் அத்தண்டனை தொடர்ந்து அமல்படுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

அத்தண்டனைகள் நடப்பிலுள்ள (இன்னும் திருத்தப்படாத) சட்டங்களைக் கொண்டு அமல்படுத்தப்படுகின்றன என்று இங்கு இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

கட்டாய மரண தண்டனை என்பது கிரிமினல் சட்டங்களுக்கான விதிகளை குறிக்கிறது. மரண தண்டனையை விதிப்பதை தவிர வேறு மாற்று வழி இல்லாத நிலையில் குறிப்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டவருக்கு நீதிபதி வழங்கும் தண்டனையாக இது உள்ளது.


Pengarang :