ANTARABANGSAECONOMY

ஸ்பெய்ன் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பன்றி இறைச்சி அடங்கிய கொள்கலன் பறிமுதல்

ஷா ஆலம், ஜூன் 14- ஸ்பெய்ன் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறைய வைக்கப்பட்ட பன்றி இறைச்சி அடங்கிய கொள்கலனை மாக்கிஸ் எனப்படும் தனிமைப்படுத்துதல் மற்றும் சோதனைச் சேவைத் துறை பறிமுதல் செய்துள்ளது.

இங்குள்ள வட துறைமுகத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 282,000 வெள்ளி மதிப்பிலான அந்த பன்றி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதாக மாக்கிஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

தமது துறையைச் சேர்ந்த இரு அதிகாரிகள் மேற்கொண்ட வழக்கமான சோதனையின் போது 25,000 கிலோ எடை கொண்ட அந்த பன்றி இறைச்சி அடங்கிய கொள்கலன் பறிமுதல் செய்யப்பட்டது என்று அது தெரிவித்தது.

அந்த கொள்கலன் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மாக்கிஸ் வெளியிட்டுள்ள இறக்குமதி பெர்மிட்டில் உள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் வழி 2011 ஆம் ஆண்டு தனிமைப்படுத்துதல் மற்றும் சோதனைச் சேவைத் துறை சட்டத்தின் 15(1) வது பிரிவின் ஷரத்துகள் மீறப்பட்டுள்ளன. இக்குற்றத்திற்கு அதே சட்டத்தின் 15(2)வது பிரிவின் கீழும் நடவடிக்கை எடுக்க முடியும். இச்சட்ட விதிகளின் கீழ் குற்றவாளி என கண்டுபிடிக்கப்படுவோருக்கு 100,000 வெள்ளி வரையிலான  அபராதம், ஆறாண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என அத்துறை கூறியது.


Pengarang :