ECONOMYSELANGOR

புனரமைப்பு பணியால் அண்டை வீட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விவாதிக்க சிறப்பு சந்திப்பு- குணராஜ் தகவல்

கிள்ளான், ஜூன் 15- இங்குள்ள தாமான் கிள்ளான் ஜெயாவில் அண்டை வீட்டு உரிமையாளர் மேற்கொள்ளும் புனரமைப்பு பணிகளால் அருகிலுள்ள வீடு பாதிப்புக்குள்ளானது தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் விவகாரம் குறித்து விவாதிக்க சிறப்பு சந்திப்புக் கூட்டம் ஒன்று விரைவில் நடத்தப்படும்.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் நீடித்து வரும் இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்ட இரு வீடுகளின் உரிமையாளர்கள் மற்றும் கிள்ளான் நகராண்மை கழகத்தை உள்ளடக்கிய அச்சந்திப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

இப்பிரச்னை கடந்த 2019 ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் எனினும், நீதிமன்றத் தீர்ப்பு புகார்தாரருக்கு பாதகமாக அமைந்து விட்டதாகவும் அவர் சொன்னார்.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட அந்த வீட்டின் உரிமையாளர் பாதுகாப்பு கருதி ஈராண்களுக்கு வேறு இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்க வேண்டிய நிருபந்தம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அண்டை வீட்டில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகளால் தனது வீட்டிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் கடந்த 2016 ஆம் ஆண்டில் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவ்வீட்டில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும்படி அண்டை வீட்டுக்காரருக்கு கிள்ளான் நகராண்மைக் கழகம் உத்தரவிட்டது.

அந்த வீட்டின் சுவர்களில் ஏற்பட்ட விரிசல்களுக்கான காரணத்தைக் கண்டறிவதற்கு ஆலோசக நிறுவனம் ஒன்றையும் நகராண்மைக்கழகம் பணியமர்த்தியது. எனினும், அதன் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட அந்த வீடு வசிப்பதற்கு பாதுகாப்பானதாக இல்லை என்று தீயணைப்புத் துறையும் சான்றளித்துள்ளது. அந்த வீட்டின் வரவேற்புக்கூடம் மற்றும் அறைகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆகவே, நீடித்து வரும் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் கிள்ளான் நகராண்மைக் கழகம் உள்பட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு முடிவெடுத்துள்ளோம் என்று அவர் சொன்னார்.

கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் கட்டிட துறையின் பிரதிநிதிகளுடன் பாதிக்கப்பட்ட அந்த வீட்டை ஆய்வு செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் குணராஜ் இதனைத் தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டால் இவ்விவகாரத்தை தாம் மந்திரி புசாரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் அனுமதியுடன் புனரமைப்பு பணியை மேற்கொண்டு வரும் அண்டை வீட்டுக்காரர் கடந்த 2020 ஜூன் மாதம் இதன் தொடர்பான சிவில் வழக்கிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறியப்படுகிறது.

இவ்விவகாரத்திற்கு தீர்வு காணும் கடப்பாட்டை எங்கள் தரப்பு கொண்டுள்ளதோடு விரிவான மற்றும் நல்லிணக்க அடிப்படையில் சுமூகமான தீர்வை எட்ட முடியும் என நம்புகிறோம் என்றார் அவர்.

இதனிடையே, காணொளி வாயிலாக தாம் வெளியிட்ட கருத்துகள் யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் அதற்கு தாம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான பி. ராகேஷ் (வயது 50) கூறினார்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வீட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்த அந்த காணொளியை வெளியிட்டதாக அவர் சொன்னார்.


Pengarang :