ECONOMYNATIONAL

வெளிநாடுகளில் வெ. 510 கோடி சொத்துகள் பறிமுதல்- 99.57 விழுக்காடு 1எம்.டிபி. தொடர்புடையவை

புத்ரா ஜெயா, ஜூன் 15- கடந்தாண்டில் வெளிநாடுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டு நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சொத்துகளின் மதிப்பு 510 கோடி வெள்ளியாகும். அவற்றில் 99.57 விழுக்காடு 1 மலேசியா டெவலெப்மெண்ட் பெர்ஹாட் (1எம்.டி.பி.) தொடர்புடைய சொத்துகளாகும்.

விசாரணைக்குப் பின் சொத்து பறிமுதல் தொடர்பான 152 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளையில் அவற்றில் 121 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.

அந்த வழக்குகளில் 96.7 விழுக்காடு அல்லது 117 புரோசிகியூஷன் தரப்புக்கு சாதகமாக இருந்த வேளையில் நான்கு வழக்குகள் அல்லது 2.2 விழுக்காடு புரோசிகியூஷன் தரப்புக்கு பாதகமாக அமைந்தன என்று அவர் சொன்னார்.

இங்குள்ள எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் நடைபெற்ற 2021 ஆம் அண்டு தகவல் சாதன விருதளிப்பு நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்விபரங்களை வெளியிட்டார்.

சிறிய தொகை சம்பந்தப்பட்டிருந்தாலும் கூட ஊழல் தொடர்பில் செய்யப்படும் அனைத்துப் புகார்களையும் எம்.ஏ.சி.சி. விசாரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

எம்.ஏ.சி.சி.யின் அதிகார வரம்பிற்குட்பட்ட குற்றத்தன்மை இருப்பதற்கான காரணம் தென்படும் பட்சத்தில் விசாரணை அறிக்கை திறக்கப்படும். விசாரணை முற்றுப் பெற்றவுடன் மேல் நடவடிக்கைக்காக அந்த அறிக்கை சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்றார் அவர்.

ஒருவர் மீது குற்றஞ்சாட்டுவதற்கு ஒப்புதல் அளிப்பது சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்தின் விவேகத்திற்குற்பட்டதாக இருந்தாலும் எம்.ஏ.சி.சி.யின் விசாரணையின் மூலம் கிடைக்கும் ஆதாரங்கள் அத்துறையின் முடிவுக்கு வலுசேர்க்கும் வகையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :