ECONOMYNATIONAL

மாரா முறைகேடு விவகாரம்- சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றஞ்சாட்ட எம்.ஏ.சி.சி. பரிந்துரை 

புத்ரா ஜெயா, ஜூன் 15- மாரா கார்ப். நிறுவனத்தின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் உயர்நெறி விவகாரம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) விசாரணையை முடித்துள்ளது.

இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டு கொண்டு வருவதற்கு சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்திற்கு அந்த ஆணையம் பரிந்துரையும் செய்துள்ளது.

அந்த வழக்கு தொடர்பான கோப்பு ஒன்றை தாங்கள் சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்திடம் சமர்ப்பித்துள்ளதோடு இதன் தொடர்பில் வழக்கு தொடுக்கப்பட வேண்டியவர்களின் பெயர்ப்பட்டியலையும் வழங்கியுள்ளதாக எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.

அந்த முறைகேடு தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட வேண்டிய மூவருக்கு எதிரான வழக்கை சட்டத் துறை தலைவர் அலுவலகம் கைவிடும் எனக் கூறப்படுவது குறித்து கருத்துரைத்த அவர், அந்த வழக்கு கைவிடப்படுவது தொடர்பில் சட்டத் துறை தலைவர் அலுவலகத்திலிருந்து தாங்கள் இதுவரை எந்த அறிக்கையும் பெறவில்லை என்றார்.

எங்களைப் பொறுத்தவரை, இந்த வழக்கை நாங்கள் விசாரித்து சில நபர்களுக்கு எதிராக சில குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளது என்ற எங்களின் நிலைப்பாட்டையும் தெரிவித்து விட்டோம் என்றார் அவர்.

இங்குள்ள எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான தகவல் சாதனை விருதளிப்பு விழாவுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

உயர்நெறி தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் சில மாரா அதிகாரிகளுக்கு எதிராக தாங்கள் புகார்களைப் பெற்றுள்ளதாக எம்.ஏ.சி.சி. கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி கூறியிருந்தது.

கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி மாரா சில மாரா அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்திய எம்.ஏ.சி.சி. அதிகாரிகள் பல ஆவணங்களை கைப்பற்றினர்.


Pengarang :