ECONOMYSELANGOR

செலங்கா செயலியின் செயல்பாடுகள் விரிவாக்கப்படும்- மந்திரி புசார்

ஷா ஆலம், ஜூன் 15– இலக்கவியல் யுகத்தின் மேம்பாட்டிற்கேற்ப செலங்கா செயலியின் செயல்பாடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டு தனிநபர் சுகாதார புத்தகமாக உருவாக்கப்படும்.

சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் இச்செயலியில் சேகரித்து வைக்கப்பட்டு எதிர்காலத் தேவைக்கான ஆவணமாகப் பயன்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வரும் 2025ஆம் ஆண்டில் சிலாங்கூரை விவேக மாநிலமாக ஆக்கும் திட்டத்திற்கேற்ப இது அமைந்துள்ளது. தரவு சேமிப்புத் திறனை அதிகரிக்கவும் தனிநபர்களின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் இத்திட்டம் உதவும் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

இருதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகப் பிரச்னை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் தொடர்பான மருத்துவப் பரிசோதனையை இலவசமாக பெறுவதற்கு ஏதுவாக செலங்கா செயலியில் பதிவு செய்து கொள்ளும்படியும் பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

இலவச மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டப் பின்னர் செலங்கா செயலியை அழித்து விட வேண்டாம் என சிலாங்கூர் சாரிங் பங்கேற்பாளர்களை செல்கேட் ஹெல்த்கேர்  நிறுவன தலைமை நிர்வாகி டாக்டர் ஜீவராஜா ரத்னராஜா கடந்த மாதம் 28 ஆம் தேதி கேட்டுக் கொண்டார்.

அந்த மருத்துவச் சோதனையின் முடிவுகள் செலங்கா செயலியில் வெளியிடப்படும் என்பதோடு பிற்காலத் தேவைக்காக அந்த தரவுகளை சேகரித்தும் வைத்துக் கொள்ள இயலும் என அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் அரசாங்கம் சுமார் 34 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக 39,000 பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :