ECONOMYPENDIDIKANSELANGOR

நாட்டின் இறையாண்மையைக் காக்கும் பொறுப்பு பட்டதாரிகளுக்கு உண்டு- சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி உரை

ஷா ஆலம், ஜூன் 15– மலேசியா தொடர்ந்து இறையாண்மை கொண்ட நாடாக விளங்குவதை உறுதி செய்வதில் பட்டதாரிகள் அறிவுபூர்வமாக தங்கள் பங்களிப்பை வழங்க முடியும் என்று சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின்  கூறினார்.

நாடு சீரழிவிலும் குழப்பத்திலும் சிக்கி அனைத்தையும் இழந்துவிடாமலிருப்பதை உறுதி செய்வது அறிவார்ந்த குழுமத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் பட்டதாரிகளின் கடமையாகும் என்று மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (யு.ஐ.டி.எம்.) இணை வேந்தருமான அவர் குறிப்பிட்டார்.

மலேசியர்களாகிய நாம் ஒருவரோடு ஒருவர் ஒன்றுபட்டு இருப்பதுதான் இதற்கான வழிகளில் ஒன்றாகும். நாம் ஒற்றுமையாக இல்லாவிடில் நாடு வீழ்ச்சி கண்டு அழிந்து போக வேண்டும் என விரும்பும் தரப்பினரின் பல்வேறு அச்சுறுத்தல்களை  எதிர்கொள்ள முடியாமல் போகலாம் என்று அவர் நினைவுறுத்தினார்.

ஷா ஆலம், யு.ஐ.டி.எம். பல்கலைக்கழகத்தின் 93 வது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது நாளான இன்று பட்டதாரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

பிள்ளைகள் தங்கள் பூர்வீகத்தை மறந்து விடாமலிருப்பதை உறுதி செய்ய அவர்களுக்கு தொடர்ந்து நினைவுறுத்தியும் வலியுறுத்தியும் வரும்படி பெற்றோர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

வரும் 2025ஆம் ஆண்டில் உலகின் தலைசிறந்த உயர்கல்விக் கூடம் என்ற அந்தஸ்தை யு.ஐ.டி.எம்.மிற்கு பெற்றுத் தருவதில் துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் ரோஸியா முகமது ஜனோர் தலைமையிலான நிர்வாகம் முக்கிய பங்கினை  ஆற்றும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :