ECONOMYHEALTHSELANGOR

மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பு- சிலாங்கூர் சாரிங் திட்டத்தின் வழி நோய் அறிகுறியை முன்கூட்டியே கண்டறிவீர்

ஷா ஆலம், ஜூன் 16- நாட்டில் அதிகமானோரைத் தாக்கும் புற்றுநோய்களில் ஒன்றாக மார்பகப் புற்றுநோய் விளங்குகிறது. அந்நோயினால் பாதிக்கப்படுவோரில் 43 விழுக்காட்டினர் அதன் பாதிப்பை தாமதமாகவே அறிந்து கொள்கின்றனர்.

அந்த ஆட்கொல்லி நோயை முன்கூட்டியே கண்டறியும் பட்சத்தில் கடுமையான பாதிப்பிலிருந்தும் அதிக மருத்துவ செலவினச் சுமையிலிருந்தும் தப்ப முடியும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

இத்தகைய நோய்களை முன்கூட்டியே அடையாளம் காணும் நோக்கில் சிலாங்கூர் சாரிங் எனும் இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம் நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.

மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்வதற்கு விரைந்து பதிந்து கொள்ளுங்கள்.

செலங்கா செயலியில் உள்ள இடர் மதிப்பீடு பாரத்தில் வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு எத்தகைய சோதனைகளை மேற்கொள்வது என முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.

சுமார் 34 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் மாநில அரசு மேற்கொண்டு வரும் இந்த இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தின் வழி 39,000 பேர் வரை பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரம்பரை நோய்ப் பின்னணி கொண்டவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், ஆரோக்கிய வாழ்க்கை முறையை கடைபிடிக்காதவர்கள் இந்த மருத்துவ பரிசோதனைத் திட்டத்தில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கி வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் நடைபெறும் இந்த இலவச பரிசோதனை இயக்கத்தில் பொது மருத்துவ சோதனை, மார்பக புற்று  நோய் சோதனை, இரத்த பரிசோதனை, கண் பரிசோதனை, சிறுநீரக சோதனை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சோதனை பெருங்குடல் மலப் பரிசோதனை, புரோஸ்டேட் சோதனை ஆகியவை மேற்கொள்ளப்படும்.


Pengarang :