ECONOMYSELANGOR

மாநில அரசின் மக்கள் நலத் திட்ட அறிமுக நிகழ்வு அம்பாங்கில் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும்

ஷா ஆலம், ஜூன் 16- புதிய மற்றும் மெருகேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தும் பென்யாயாங் சிலாங்கூர் பயண விழா வரும் 19 ஆம் தேதி அம்பாங், தாமான் கோசாஸ் திடலில் நடைபெறும்.

காலை 8.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ள பெடுலி ராக்யாட் (ஐ.பி.ஆர்.) திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடக்கி வைப்பார்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ரூமா இடாமான் திட்டத்தில் வீடு வாங்கிய பத்து பேருக்கு அங்கீகாரக் கடிதங்களையும் விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு மானியமும் அவர் வழங்குவார்.

மாநில அரசின் சமூக நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கிலான இந்த பயணத் தொடரில் மாநில அரசின் 23 துணை நிறுவனங்கள் பங்கேற்கும் என்று எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் (ஒருங்கிணைக்கப்பட்ட) கழகம் முன்னதாக கூறியிருந்தது.

இந்த நிகழ்வில் கலைஞர்களின் இன்னிசைப் படைப்புகள், ஏரோபிக், சமையல் போட்டி, மலர் அலங்காரம், மக்கள் விளையாட்டு, மின்-விளையாட்டு ஆகிய அங்கங்களும் இடம் பெறும்.

கிஸ் எனப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் பரிவு அன்னையர் திட்டத்திற்கு பதிலாக பிங்காஸ் என்ற  சிலாங்கூர் மக்கள் நல்வாழ்வு உதவித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் வழி இத்திட்டத்தில் உதவி பெற்றவர்களின் எண்ணிக்கை 25,000 லிருந்து 30,000 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கடும் நோய்களைக் கண்டறிவதற்காக 15 லட்சம் வெள்ளி செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிலாங்கூர் சாரிங் திட்டத்தின் மூலம் நோய்க்கான ஆபத்து உள்ள சுமார் 5,000 பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வு கோல லங்காட், பந்தாய் மோரிப் சதுக்கத்தில் வரும் ஜூன் 25 ஆம் தேதி நடைபெறும். அதன் பின்னர் இத்திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.


Pengarang :