ECONOMYPENDIDIKANSELANGOR

லீ லாம் தை வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை சிலாங்கூர் சுல்தான் வெளியிட்டார்

கோலாலம்பூர், ஜூன் 17– டான்ஸ்ரீ லீ லாம் தையின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் இங்குள்ள கான்கார்ட் ஹோட்டலில் நேற்று வெளியீடு செய்தார்.

சோப்பியா சோக் லிங் மற்றும் பி.செல்வராணி எழுதிய “லீ லாம் தை- உங்கள் வாழ்நாள் சேவையை நினைவுகூர்கிறோம்“ எனும் தலைப்பிலான அந்த புத்தகம் அரசுத் துறையில் மற்றும் சமூக அமைப்புகளில் பணியாற்றிய போது அந்த இயக்கவாதி பெற்ற அனுபவங்களை விரிவாக விவரிக்கிறது.

மொத்தம் 312 பக்கங்களைக் கொண்ட அந்த புத்தகம் மலாய், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. ஐம்பது முதல் எழுபது வெள்ளி விலையிலான அந்த புத்தகத்தை நேற்று தொடங்கி இணையம் வாயிலாகவும் புத்தகக் கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.

முன்பு ஒருமுறை மேன்மை தங்கிய சுல்தானை சந்தித்த போது அவர் வெளியிட்ட ஆலோசனையின் பேரில் இந்த புத்தகத்தை தாம் வெளியிடுவதற்கு முடிவெடுத்ததாக பாதுகாப்பான சமூக ஒருங்கமைப்பின் தலைவருமான லீ சொன்னார்.

இந்த புத்தகத்தை உருவாக்குவதற்கு ஐந்து ஆண்டுகள் பிடித்தன. எனது 53 ஆண்டுகால அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையில் கடந்த வந்த பாதையை இந்த புத்தகம் நினைவுகூர்கிறது என்றார் அவர்.

எனது அரசியல் வாழ்வு 1990 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. எனினும், நாட்டிற்கும் சமூகத்திற்குமான எனது பணி இன்னும் தொடர்கிறது என்று அவர் சொன்னார்.

தற்போது 76 வயதை எட்டியுள்ள லீ லாம் தை, புக்கிட் நெனாஸ் மற்றும் செர்டாங் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளதோடு 1978 முதல் 1990 வரை புக்கிட் பிந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பையும் வகித்துள்ளார்.


Pengarang :