ECONOMYHEALTHSELANGOR

புற்று நோய்ப் பின்னணி உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  மருத்துவ பரிசோதனையில் பங்கேற்க வலியுறுத்து

ஷா ஆலம், ஜூன் 17 –  புற்றுநோய்ப் பின்னணி உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்  உடனடியாகத் தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத் துறைக்கான  ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தில் அவர்கள் பதிவு செய்யலாம்.  நோய் மோசமடைவதைத் தவிர்க்க  முன்கூட்டியே கண்டறிவதற்கான வாய்ப்பை இந்த மருத்துவ பரிசோதனை வழங்குகிறது என்று அவர் சொன்னார்.

உங்கள் குடும்பத்தில் பெருங்குடல், கர்ப்பப்பை வாய் அல்லது மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் உண்டா? அவ்வாறு இருப்பின், மொபைல் ஆப் மூலம் சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் பதிவு செய்யவும். பதிவு இலவசம். உங்கள் உயிருக்கு மதிப்பு கொடுங்கள். முன்கூட்டியே மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுங்கள் என்று அவர் நேற்று முகநூல் பதிவில் கூறினார்.

மாநில அரசாங்கம், சிலாங்கூர் சாரிங் திட்டத்திற்காக  34 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 39,000 பேர் பயனடைவர் என மதிப்பிடப்படுகிறது.

நோய்ப் பின்னணி உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்,  அதிக எடை கொண்டவர்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வாழ்பவர்களுக்கு இச்சோதனையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

பொதுவான உடல் பரிசோதனை, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நோக்கிலான இச்சோதனை வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.

இந்த வாரம், சனிக்கிழமை டிங்கில் மற்றும் சுங்கை ராமால் ஆகிய இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை சுங்கை பீலேக், பாண்டன் இண்டா மற்றும் தெராத்தாய்  தொகுதிகளிலும் இந்த பரிசோதனை நடைபெறும்.

 


Pengarang :