ECONOMYSELANGOR

பத்தாங் காலி தொகுதியில் வெ.60,000 செலவில் சிறு அடிப்படை வசதிகள் சீரமைப்பு

ஷா ஆலம், ஜூன் 17- பத்தாங் காலி சட்டமன்றத் தொகுதியிலுள்ள பகுதிகளில்  சிறிய உள்கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்ள  இதுவரை மொத்தம் 60,000 வெள்ளி செலவிடப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் புயலால் சேதமடைந்த குடியிருப்பாளர்களின் வீடுகளின் கூரைகள் பழுதுபார்க்கும் பணிகளும் அதில் அடங்கும் என்று  தொகுதி  ஒருங்கிணைப்பாளர் சைபுடீன் ஷாபி முகமது கூறினார்.

உலு சிலாங்கூர் குடியிருப்பாளர்களின் வீடுகள்  இத்தகைய பேரிடர்களால் அடிக்கடி பாதிக்கப்படுகின்றன. எனவே, நாங்கள் ரொக்கமாக தொகையை வழங்குவது அல்லது ஒப்பந்ததாரரை நியமித்து பாதிப்புகளைச் சரி செய்வது போன்ற பணிகளை மேற்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார் .

குடியிருப்புவாசிகளின் வசதிக்காக, குடியிருப்புகளில் குறைவான செலவை உட்படுத்திய  சிறிய சேதம் ஏதும் ஏற்பட்டால்  நாங்கள் உடனடியாகத் தீர்ப்போம்  என்று அவர் தொடர்பு கொண்டபோது சொன்னார்.

இதற்கிடையில்,  தொகுதியில் சிறு திட்டங்களுக்கு சிலாங்கூர் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட  100,000 லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டில் உள்ள எஞ்சியத் தொகை முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

விளையாட்டு மைதானங்கள், சமுதாயக் கூடங்கள், வடிகால்களை சீரமைத்தல் போன்ற  திட்டங்களை சம்பந்தப்பட்ட பகுதிகளில் செயல்படுத்தலாம் என்பது குறித்து நேற்று பெங்குலு மற்றும் கிராமத் தலைவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

கூடுமானவரை, ஒதுக்கீட்டை உடனடியாக மக்களின் நலனுக்காகச் செலவிட விரும்புகிறோம். ஆகவேதான் திட்டங்கள் தொடர்பில் உரிய ஆவணங்களைத் தயாரிக்க சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் கூறினார்.


Pengarang :