ANTARABANGSAECONOMYSELANGOR

முதலீடுகளைக் கவர மந்திரி புசார் தென் கொரியா பயணம்

ஷா ஆலம், ஜூன் 17– ஈராண்டு கால இடைவெளிக்குப் பிறகு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தென் கொரியாவை இலக்காகக் கொண்டு தனது முதலீட்டுப் பயணத்தை  தொடக்கியுள்ளார்.

மந்திரி புசாரின் இந்த முதலீட்டுப் பயணத்தில் முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம்மும்  இடம் பெற்றுள்ளார்.

இந்த பயணத்தின் போது அவ்விரு தலைவர்களும் சிலாங்கூரில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ள சில நிறுவனங்களுடன் பேச்சு நடத்தியதோடு சிலாங்கூர் மாநிலத்தின் வெற்றிக்கான இரகசியத்தையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

வான் போக்குவரத்து நிறுவனங்கள், மின் விளையாட்டு மென்பொருள் தயாரிப்புத் துறையினர் நீர், சோலார் சக்தி உள்ளிட்ட ராட்சத தொழில்நுட்ப நிறுவனங்களுடன் நாங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம் என்று அமிருடின் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.

சியோலில் உள்ள மலேசிய தூதரகத்திற்கு மீடா அலுவலகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பயணத்தின் மூலம் முதலீடுகளை ஈர்க்கும் அதே வேளையில் சிலாங்கூர்-தென் கொரிய உறவும் வலுப்பெறும் என நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த பயணத்தின் போது மந்திரி பெசார் கே-வாட்டர் நிறுவனத்தால் நடத்தப்படும் சியோங்நாம் நீர் சுத்திகரிப்பு மையத்திற்கும்  அவர் வருகை புரிந்தார். நீடித்த மற்றும் சுயமாக மின்சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய நவீன தொழில்நுட்ப ஆற்றல் கொண்ட அந்த சுத்திகரிப்பு மையம் சியோங்நாம் நகருக்கு சுத்தமான நீரை விநியோகம் செய்கிறது.


Pengarang :