ECONOMYNATIONAL

ஏர்பஸ் ஏ330 ரக விமானங்களை மாற்ற மலேசியன் ஏர்லைன்ஸ் திட்டம்

டோஹா, ஜூன் 20- மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தன் வசம் உள்ள 21 அகண்ட உடலமைப்பு கொண்ட ஏ330 ஏர்பஸ் ரக விமானங்களுக்கு பதிலாக எரிபொருளை மிச்சப்படுத்தக் கூடிய புதிய தலைமுறை விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு வரும் ஜூலை மாதம் பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி இஷாம் இஸ்மாயில் கூறினார்.

இந்த திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் நாங்கள் உள்ளோம். ஏ330 ரக விமானங்களை ஒன்றின் பின் ஒன்றாக மாற்றும் சாத்தியத்தை ஆராய்ந்து வருகிறோம் என்று கட்டாரில் நடைபெற்ற ஐயாட்டா எனப்படும் விமான தொழில் துறை சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்திற்குப் பின்னர் ராய்ட்டரிடம் அவர் தெரிவித்தார்.

தன் வசமுள்ள 15 ஏ330-330 விமானங்கள் மற்றும் ஆறு ஏ330-200 ரக விமானங்களுக்கு மாற்றாக தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து நேரடியாக அல்லது ஒப்பந்த நிறுவனங்களிடமிருந்து வாங்கப்படுமா என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.

சம்பந்தப்பட்ட ஏர்பஸ் நிறுவனங்களுக்கு இணையான அளவுக் கொண்ட விமானங்களாக ஏ350எஸ், போயிங் 787 மற்றும் ஏ330 நியோ ஆகியவை சந்தையில் உள்ளன.

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் தற்போது ஏ350எஸ் விமானங்கள் உள்ளன.

போயிங் 787 ரக விமானங்களை வாங்குவதற்கு அந்நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்த காலாவதியாகி விட்டது.

கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் இந்த புதிய விமானக் கொள்முதல் திட்டம் துணை புரியும் என மலேசியன் ஏர்லைன்ஸ் நம்புகிறது.

பெருந்தொற்றுக்கு முந்தைய காலந்தொட்டு இழப்பை எதிர்நோக்கி வந்த இந்நிறுவனம் கடந்தாண்டு அக்டோபர் முதல் லாபத்தை பதிவு செய்யத் தொடங்கியுள்ளது.


Pengarang :