ECONOMYSELANGOR

ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டம்- விவசாயிகளுக்கு வெ.20 லட்சம் நிதியுதவி

உலு லங்காட், ஜூன் 20- ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சுமார் 20 லட்சம் வெள்ளி பகிர்ந்தளிக்கப்படுவதாக விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

வேளாண் உற்பத்தி பொருள்கள் தரமாக இருப்பதற்கு ஏதுவாக விதைகள், உரம் உள்ளிட்ட பொருள்கள் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

உலு லங்காட் மாவட்டத்திலுள்ள 24 விவசாயிகளுக்கு சுமார் நான்கு லட்சம் வெள்ளி மதிப்புள்ள உதவியை வழங்குவதன் மூலம் இத்திட்டத்தை தொடங்குகிறோம். இதன் பின்னர் இத்திட்டம் இதர மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

காய்கறி மற்றும் பழ பயிரீட்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த உதவி வழங்கப்படும் என்று இந்த உதவித் தொகை வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.

மாநில மக்களுக்கு பல்வேறு உதவித் திட்டங்களை அறிமுகம் செய்யும் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் நேற்று கோல லங்காட் மாவட்டத்தில் தொடக்க விழா கண்டது. மாநில அரசின் 23 துணை நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் அமல்படுத்துகிறது.

மாநில அரசு அமல்படுத்தும் திட்டங்கள் வாயிலாக மேலும் அதிகமானோர் பயன் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் பெடுலி ராக்யாட் திட்டத்திற்கு மாற்றாக இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தை 60 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் மாநில அரசு அமல்படுத்துகிறது.


Pengarang :