ECONOMYNATIONAL

தீபகற்ப மலேசியாவில் கூட்டரசு சாலைகளைப் பழுதுபார்க்க வெ.340 கோடி தேவை

கிரீக், ஜூன் 20- தீபகற்ப மலேசியா முழுவதும் உள்ள பழுதடைந்த கூட்டரசு சாலைகளைப் சீரமைக்க பொதுப்பணி அமைச்சுக்கு 340 கோடி வெள்ளி தேவைப்படுகிறது.

பழுதடைந்த சாலைகளைச் செப்பனிடுவது மற்றும் புதிதாக சாலைகளை அமைக்கும் பணிகள் வரும் 2023 ஆம் ஆண்டில் முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபட்சிலா யூசுப் கூறினார்.

இந்த நிதி ஒதுக்கீட்டை வழங்குவதற்கு முன் பல்வேறு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். கிழக்கு-மேற்கு கூட்டரசு சாலையை சீரமைக்கத் தேவைப்படும் 6.8 கோடி வெள்ளிக்கு பற்றாக்குறை நிலவுவதும் இதில் அடங்கும் என அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் நாங்கள் நிதியமைச்சை குறைகூற விரும்பவில்லை. எனினும், இதுதான் நாங்கள் எதிர்நோக்கும் சவாலாகும். இப்பிரச்னைக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண்பதற்கான வழிகளை நாங்கள் ஆராய்வோம் என்றார் அவர்.

பேராக் மாநிலத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பழுதுபார்க்க வேண்டிய சாலைகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அதிக வாகன எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக தற்போதுள்ள சாலைகள் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் மட்டுமே தாக்குப் பிடிக்கும். கிரீக் போன்ற இடங்களில் 40 ஆண்டுகளுக்கு முன்னதாக அமைக்கப்பட்ட சாலைகளின் நிலையை சற்று எண்ணிப்பாருங்கள் என்று அவர் சொன்னார்.

சுமார் 130 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையின் மேம்பாடு தொடர்பில் நடைபெற்ற விளக்கமளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :