ECONOMYNATIONAL

எம்.எச்370 விமானத்தை தேடும் முயற்சியை மீண்டும் தொடர ஓஷியன் இன்ஃபினிட்டி நிறுவனம் தயார்

புத்ரா ஜெயா, ஜூன் 21– இன்று வரை கண்டுபிடிக்கப்படாமலிருக்கும் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்.எச்370 விமானத்தை கண்டு பிடிக்கும் பணியை மீண்டும் தொடர கடல் ரோபோட்டிக்ஸ் நிறுவனமான ஓஷியன் இன்ஃபினிட்டி முன்வந்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங்கை நேற்று சந்தித்த அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் “கண்டு பிடிக்காவிட்டால் காசு வேண்டாம்“ ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த விமானத்தைத் தேட முன்வந்துள்ளனர்.

ஓஷியன் இன்ஃபினிட்டி நிறுவன தலைமைச் செயல்முறை அதிகாரி ஒலிவர் ப்ளெங்கெட் மற்றும் அந்த விமானத்தில் பயணித்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பிரதிநிதிகளை தாம் நேற்று தமது அலுவலகத்தில் சந்தித்ததாக வீ தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது தனது நிறுவனத்திடம் உள்ள நவீன தொழில்நுட்பம், மனித ஆற்றல் மற்றும் திறன் குறித்து ஒலிவர் தம்மிடம் எடுத்துரைத்ததாக அவர் சொன்னார்.

அந்த விமானத்தை தேடும் நடவடிக்கையை மீண்டும் தொடர தங்கள் நிறுவனம் தயாராக உள்ளதாக ஒலிவர் இச்சந்திப்பின் போது கூறினார். விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே அப்பணிக்கான கட்டணத்தைச் செலுத்தினால் போதுமானது என்று அவர் தெரிவித்தார் என வீ கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் ஆஸ்திரேலியா மற்றும் சீனாவுடன் விவாதிப்பதற்கு முன்னர் அந்நிறுவனம் பற்றிய மேல் விபரங்களைப் பெறும்படி போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளை தாம் பணித்துள்ளதாக அவர் சொன்னார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி 239 பேருடன் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த விமானம் நடு வழியில் காணாமல் போனது.


Pengarang :