ECONOMYSELANGOR

மின்-வணிக விருதளிப்பு நிகழ்வு ஏழாம் ஆண்டாகத் தொடர்கிறது- 250 பேர் பங்கேற்பு

கோலாலம்பூர், ஜூன் 21- மலேசிய முதன்மை மின்-வணிக வர்த்தகர் விருதளிப்பு நிகழ்வு இவ்வாண்டும் தொடர்ந்து நடத்தப்படும். வெற்றி பெற்ற தொழில்முனைவோரை கௌரவிக்கும் நோக்கிலான இந்த நிகழ்வு நாளை தொடங்கி மூன்று மாதங்களுக்கு  நடைபெறும்.

ஏழாம் ஆண்டாக நடத்தப்படும் இந்த விருதளிப்பு நிகழ்வு 250 பங்கேற்பாளர்கள் மற்றும் 5 கோடி வெள்ளி வர்த்தக மதிப்பைக் கொண்டதாக இருக்கும் என்று சிடேக் எனப்படும் சிலாங்கூர் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் இலக்கவியல் பொருளாதாரக் கழகம் கூறியது.

அறுபதாயிரம் வெள்ளி வரையிலான வெகுமதியை இந்த விருதளிப்பு உள்ளடக்கியிருக்கும் என்பதோடு அனைத்துலக சந்தைகளில் நுழைவதற்கு ஐந்து பங்கேற்பாளர்களும் இந்நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அக்கழகத்தின்  தலைமை செயல்முறை அதிகாரி யோங் காய் பிங் கூறினார்.

இந்த நிகழ்வின் பங்கேற்பாளர்கள் இவ்வாண்டு மார்ச் மாதத்திற்கு முன்னதாக மின்-வர்த்தக அகப்பக்கத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதோடு குறைந்தது 25,000 வெள்ளி மதிப்பிலான வியாபாரம் அல்லது இவ்வாண்டில் இதுவரை குறைந்தது 100 அழைப்பாணைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

இதுதவிர, மலேசிய நிறுவன ஆணையத்திலும் அவர்கள் தங்கள் வணிகத்தை பதிவு செய்திருக்க வேண்டும். இந்த நிகழ்வுக்கு அஃப்பின் வங்கி ஏற்பாட்டு ஆதரவை வழங்கியுள்ளதோடு இலக்கவியல் வர்த்தக தளமான சப் ப்ளேஸ் அதிகாரப்பூர்வ மின்-வணிகத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் முதன் முறையாக இந்த டோப் இ.சி.எம். விருதளிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட போது 60 பங்கேற்பாளர்கள் மட்டுமே பங்கேற்றனர். ஆண்டு தோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்து கடந்தாண்டு அந்த எண்ணிக்கை 181 ஆக உயர்வு கண்டது என்றார் அவர்.


Pengarang :