ECONOMYSELANGOR

பள்ளிகளில் சிற்றுண்டிச் சாலை மற்றும் இட வாடகை விலக்களிப்பு ஆண்டு இறுதி வரை நீட்டிப்பு

கோலாலம்பூர், ஜூன் 21- கல்வியமைச்சின் கீழுள்ள பள்ளிகளில் சிற்றுண்டிச் சாலை மற்றும் இட வாடகை விலக்களிப்பு வரும் ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி வரை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படவுள்ளது.

நாட்டின் நடப்பு பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு வாடகை விலக்களிப்புக்கான கால அவகாசத்தை நீட்டிக்க தாங்கள் முடிவெடுத்ததாக மூத்த கல்வியமைச்சர் டத்தோ டாக்டர்  ரட்ஸி ஜிடின் கூறினார்.

மேலும், பள்ளிகளில் சிற்றுண்டிச் சாலை நடத்துவர்களும் அங்கு இடங்களை வாடகைக்கு பெற்றவர்களும் கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து இப்போதுதான் மீண்டு வருவதை தாங்கள் உணர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கல்வியமைச்சின் கீழுள்ள பள்ளிகளில் சிற்றுண்டிச் சாலை மற்றும் இதர வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தவர்களுக்கு கடந்த ஈராண்டு காலம் மிக க் கடுமையான காலக்கட்டமாக இருந்துள்ளது.

அமைச்சு வழங்கிய அந்த ஆறு மாத கால அவகாச நீட்டிப்பு சம்பந்தப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் அதே வேளையில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசியர்களுக்கு பயனளிப்பதாகவும் இருக்கும் எனத் தாங்கள் நம்புவதாக அவர் சொன்னார்.

இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்த காணொளி ஒன்றில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்வியமைச்சின் கீழுள்ள பள்ளிகளில் சிற்றுண்டிச் சாலை நடத்துநர்கள் மற்றும் இதர வர்த்தக  நோக்கத்திற்காக இடத்தை வாடகைக்கு பெற்றவர்களுக்கு கடந்த 2021 ஜூலை தொடங்கி ஆறு மாத காலத்திற்கு வாடகை விலக்களிப்பு அளிக்கப்படுவதாக அமைச்சு முன்னதாக கூறியிருந்தது.

எனினும், அந்த வாடகை விலக்களிப்பு மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு இம்மாத இறுதி வரை அமலுக்கு கொண்டு வரப்பட்டது.


Pengarang :