ECONOMYHEALTHSELANGOR

நிதிச் சுமையைக் குறைப்பதில் இல்திஸாம் சிலாங்கூர் சிஹாட் திட்டம் பேருதவி- பயனாளிகள் பெருமிதம்

ஷா ஆலம், ஜூன் 21– இல்திஸாம் சிலாங்கூர் சிஹாட் திட்டம் மிகவும் பயனுள்ளதாகவும் அடிப்படைத் தேவைகளை ஈடுசெய்வதில் உதவக்கூடியதாகவும் உள்ளதாக அத்திட்ட பயனாளிகளின் வாரிசுகள் கூறுகின்றனர்.

இருதய நோய் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் தன் கணவரை தாம் இழந்து மிகுந்து துயரில் ஆழ்ந்துள்ளதாக எம்.பெரியநாயகி (வயது 59) கூறினார்.

எம்.பெரியநாயகி (வயது 59)

எங்களுக்கு குழந்தை இல்லாததால் என் சகோதரர் வீட்டில் தங்கியுள்ளேன். கணவரின் பிரிவு துயரத்தை ஏற்படுத்தினாலும் மாநில அரசின் இந்த உதவி எனது நிதிச்சுமையை ஓரளவு குறைக்க உதவியுள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த பணத்தை சேமித்து வைத்து மருந்து, உணவு மற்றும் அன்றாடத் தேவைக்கு பயன்படுத்தவிருக்கிறேன். என்று அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.

வயது மூப்பின் காரணமாக தன் தந்தை கடந்த  ஜனவரி மாதம் உயிரிழந்ததாக இத்திட்ட வாரிசான அஸ்மின் ஷாம் மொக்தார் (வயது 52) கூறினார்.

அஸ்மின் ஷாம் மொக்தார் (வயது 52)

இறப்பு நேரும் பட்சத்தில் நல்லடக்க சடங்குகளை மேற்கொள்வதற்கு உண்டாகும் செலவை ஈடு செய்ய மாநில அரசின் இந்த திட்டம் பெரிதும் துணை புரியும் என்று அவர் சொன்னார்.
ஐ.எஸ்.எஸ். எனப்படும் இந்த திட்டத்தை மாநில அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பாங், தாமான் கோசாசில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கியது.

சுமார் 5 கோடியே 55 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டிலான இத்திட்டம் பெடுலி சிஹாட் திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட வடிவமாக விளங்குகிறது.

இந்த ஐ.எ.ஸ்.எஸ். திட்டத்தின் கீழ் மரண சகாய நிதியாக 5,000 வெள்ளி மற்றும் நல்லடக்கச்  சடங்கிற்கான தொகையாக 1,000 வெள்ளி வழங்கப்படுகிறது.


Pengarang :