ECONOMYHEALTHNATIONAL

மூத்த குடிமக்கள் மற்றும் கடும் நோய் உள்ளவர்கள் இரண்டாம் ஊக்கத் தடுப்பூசி பெற ஊக்குவிப்பு

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 21– அறுபது வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டாவது ஊக்கத் தடுப்பூசியைப் பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

கோவிட்-19 தொற்றைத் தடுக்கும் வகையில் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கு ஏதுவாக இரண்டாவது ஊக்கத் தடுப்பூசி பெற அத்தரப்பினர் ஊக்குவிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

கோவிட்-19 நோய்ப் பரவல் ஏற்ற இறக்கம் கண்டு வரும் நிலையில் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் புதிய நோய்ப் பரவல் அலை உண்டாகும் சாத்தியம் உள்ளது என்று அவர் சொன்னார்.

அந்த நோய்த் தொற்று அலை எவ்வளவு தொலைவு பாதிக்கும் மற்றும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று நம்மால் அறுதியிட்டுக் கூற முடியாது. மற்ற நாடுகளின் நோய்த் தொற்று வார மேம்பாடுகளைக் பார்க்கையில் மற்றொரு நோய்த் தொற்று அலை உண்டாகும் என்று உணர முடிகிறது என்றார் அவர்.

ஆகவே, வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோய்களைக் கொண்டிருப்பவர்கள் தங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக இரண்டாவது ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இன்று சுகாதார அமைச்சின் இயக்குநர்கள் மாநாட்டையொட்டி நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் இதுவரை 107,844 பேர் இரண்டாவது ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக கூறிய அவர், அவர்களில் 57,834 பேர் அறுபது வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்றார்.

இரண்டாவது ஊக்கத் தடுப்பூசி பெற்றதால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் குறித்து இதுவரை தாங்கள் எந்த புகாரையும் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :