ECONOMYNATIONAL

நெரிசல் மிகுந்த நேரங்களில் 7.5 டன்னுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தலைநகருக்குள் நுழையத் தடை

கோலாலம்பூர், ஜூன் 22– போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் நேரங்களில் 7.5 டன்னுக்கும் அதிகமான எடை கொண்ட வாகனங்கள் மாநகருக்குள் நுழைவதை கூட்டரசு பிரதேச அமைச்சு கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாயிலாக தடை செய்யும். இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது.

மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தணிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் வழிமுறைகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு செயல்குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூட்டரசு பிரதேச துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் கூறினார்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த காணப்படும் நேரங்களில் கனரக வாகனங்கள் மாநகருக்குள் நுழைவது கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றின் மீது 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 79வது பிரிவின் கீழ் போலீஸ் துறையும் சாலை போக்குவரத்து இலாகாவும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாநகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதற்கு கட்டுப்பாடின்றி அனைத்து நேரங்களிலும் கனரக வாகனங்கள் உள்ளே நுழைவதே காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த உத்தரவை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அபராததிற்கு எதிராக செய்யப்படும் எந்த மேல் முறையீட்டையும் நாங்கள் பரிசீலிக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.

மாநகரின் எல்லைப் பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் தடை விதிப்பது தொடர்பான அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அகற்றப்பட்டது  வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மாநகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.


Pengarang :