ECONOMYHEALTHSELANGOR

வார இறுதியில் இரு தொகுதிகளில் இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம்

ஷா ஆலம், ஜூன் 22- மாநில நிலையிலான இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம் வரும் 25 ஆம் தேதி கோல லங்காட் பந்தாய் மோரிப் சதுக்கத்தில் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து வரும் 26 ஆம் தேதி  செராஸ், கம்போங் பத்து 9 சமூக மண்டபத்திலும் செமினி, தாமான் பெலாங்கியிலும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 500 பேர் முதல் 1,000 பேர் வரை இந்த இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலவச பரிசோதனையில் பங்கு கொள்ள விரும்புவோர் செலங்கா செயலியில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஐந்து விதமான நோய்களுக்கான சோதனைகளை மேற்கொள்ள 115,928 கோட்டா இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுவான மருத்துவச் சோதனையை கொள்ள 31,000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள வேளையில் கர்ப்பப்பை புற்றுநோய், மார்பக புற்று நோய்க்கு 12,400 இடங்களும் பெருங்குடல் புற்று நோய்க்கு 1,680 இடங்களும் புரேஸ்டேட் சோதனைக்கு 1,232 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய், மற்றும் இதர வகை நோய்களை முன்கூட்டியே கண்டறியும் நோக்கில் கடந்த மாதம் தொடங்கி இந்த  மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

சுமார் 34 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் நடத்தப்படும் இந்த இலவச மருத்துவ பரிசோதனையின் வழி மாநிலத்திலுள்ள 39,000 பேர் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்ப நோய்ப் பின்னணி உள்ளவர்கள், உடல் பருமனானவர்கள், ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கடைபிடிக்காதவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பரிசோதனை செய்து கொள்ளும்படி சித்தி மரியா கேட்டுக் கொண்டார்.


Pengarang :