ECONOMYSELANGOR

4,631 வீடுகள்; 6,194 விண்ணப்பங்கள்- ரூமா இடாமான் வீடுகளுக்கு சிறப்பான வரவேற்பு

ஷா ஆலம், ஜூன் 22– ரூமா இடாமான் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட வீடுகளைக் காட்டிலும் விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அத்திட்டத்தின் கீழ் 4,631 வீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வேளையில் அதனை வாங்குவதற்கு 6,194 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

புக்கிட் ஜெலுத்தோங், செமினி மற்றும் கோல லங்காட்டில் அந்த வீடமைப்புத் திட்டங்கள் அமைந்துள்ளதாக சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியத் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ டாக்டர் ஜூஹாரி அகமது கூறினார்.

புக்கிட் ஜெலுத்தோங்கில் நிர்மாணிக்கப்படும் 1,260 வீடுகளுக்கு 2,300  பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். செமினியில் உள்ள 2,059 வீடுகளுக்கு 2,596 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. கோல லங்காட்டைப் பொறுத்த வரை வீடுகளின் எண்ணிக்கை 1,312 ஆகவும் விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 1,298 பேராக உள்ளது என அவர் சொன்னார்.

வீடு வாங்க விரும்புவோரிடமிருந்து இத்திட்டத்திற்கு  அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த மூன்று இடங்களில் கிடைத்த வரவேற்பைப் பார்க்கையில் அடுத்து வரும் புதிய திட்டங்களிலும் அதிகமானோர் பங்கு கொள்ள முனைவர் என்பது திண்ணம் என்று அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வோர் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவும் இதற்கு முன்னர் மாநிலத்தில் சொந்தமாக வீட்டைக் கொண்டிராதவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும் என்றார் அவர்.

ஏற்கனவே சொந்த வீட்டைக் கொண்டிருப்பவர்கள் செய்யும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அவர்களின் விண்ணப்பங்கள் உடனடியாக தள்ளுபடி செய்யப்படும்.

இத்திட்டத்தில் வீடுகளைப் பெறுவதற்கான நிபந்தனைகளை  ரூமான இடாமான் அகப்பக்கத்தில் காணலாம் என அவர் தெரிவித்தார்.


Pengarang :