ECONOMYNATIONAL

விலையேற்றத்தை விரைந்து கட்டுப்படுத்தாவிடில் மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரும்- பக்கத்தான் எச்சரிக்கை

ஷா ஆலம், ஜூன் 22- கோழிக்கான உச்சவரம்பு விலை நீக்கப்பட்டது மற்றும் சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகை அகற்றப்பட்டது ஆகிய காரணங்களால் ஏற்படக்கூடிய பொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

உணவுப் பொருள் விலை உதவித் தொகை மற்றும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு ஆகியவற்றை சமாளிப்பதற்கான திட்டத்தை 24 மணி நேரத்தில் வரையும்படியும் அந்த எதிர்க்கட்சி கூட்டணி அரசாங்கத்தை வலியுறுத்தியது.

அவ்வாறு செய்யத் தவறினால், வாழ்க்கைச் செலவின விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து அமைச்சர்களும் பதவி  விலக வேண்டும் என்று அந்த கூட்டணி இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

இவ்விவகாரத்தில் மக்கள் கொண்டுள்ள சினத்தை வெளிப்படுத்தும் விதமாக சிவில் சமூகம் மற்றும் தங்களோடு இணைந்து பணியாற்றக்கூடிய தரப்பினரை ஒன்றிணைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி மேற்கொள்ளவுள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா தலைவர் மாட் சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக்  சியு புக், அப்கோ கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ மேடியஸ் தங்காவ் ஆகியோர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

கோழி மற்றும் கோழி முட்டைக்கான உச்சவரம்பு விலையும் சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகையும் வரும் ஜூலை மாதம் முதல் தேதிக்குப் பின்னர் தொடரப்படாது என்று அரசாங்கம் நேற்று அறிவித்தது.

இதனிடையே, தேசிய வாழ்க்கைச் செலவின நடவடிக்கை மன்றம் கூட்டத்தை கூட்டுவதிலும் நடவடிக்கை எடுப்பதிலும் தாமதப் போக்கை கடைபிடிப்பது குறித்து தாங்கள் பல முறை நாடாளுமன்றத்தில் அதிருப்தியை வெளியிட்டதோடு கடிந்து கொண்டுள்ளதாக அந்த கூட்டணி தெரிவித்தது.


Pengarang :