ECONOMYNATIONAL

மியாசாட்-3டி செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சப்பட்டது

கோலாலம்பூர், ஜூன் 23-  மியாசாட் 3டி செயற்கைக்கோள் தென் அமெரிக்காவின் பிரஞ்சு கயானா ஏவுதளத்திலிருந்து மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 5.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

மியாசாட்டுக்குச் சொந்தமான அந்த தொலைத் தொடர்பு செயற்கைக்கோள் மலேசியாவிலிருந்து 17,000 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கயானா விண்வெளி மையத்திலிருந்து ஏரியன்-5 ஏவு வாகனம் மூலம் விண்ணில் பாய்ச்சப்பட்டது.

இந்த செயற்கைக்கோளை விண்ணில் பாய்ச்சும் நிகழ்வை நேரில் காண்பதற்காக தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமது மேந்தேன் தனது பேராளர் குழுவினருடன் பிரஞ்சு கயானா சென்றுள்ளார்.

இந்த செயற்கைக் கோள் விண்ணில் பாய்ச்சப்படும் நிகழ்வை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா, அறிவியல் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா மற்றும் அமைச்சர்கள் இங்குள்ள உலக வாணிக மையத்திலிருந்து கண்டு களித்தனர்.

சுமார் 18 ஆண்டு ஆயுளைக் கொண்ட இந்த செயற்கைக் கோளை விண்ணில் அனுப்புவதற்கு உண்டான செலவு 120 கோடி வெள்ளியாகும்.

இதனிடையே, இந்த செயற்கைக்கோள் தனது முதலாவது டெலிமேட்ரி சமிக்ஞையை இன்று அதிகாலை 6.41 மணியளவில் அனுப்பியது. இதன் வழி இந்த  செயற்கை கோளை அனுப்பும் பணி வெற்றிகரமாக பூர்த்தியடைந்துள்ளது.


Pengarang :