ECONOMYNATIONAL

திரங்கானு உள்பட ஐந்து மாநிலங்களில் குறைவான மக்கள் தொகை வளர்ச்சி 

கோல திரங்கானு, ஜூன் 23- நாட்டில் திரங்கானு உள்பட ஐந்து மாநிலங்களில் குறைவான மக்கள் தொகை வளர்ச்சி பதிவாகியுள்ளது. அந்த கிழக்குக் கரை மாநிலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி 1.3 விழுக்காடாக மட்டுமே உள்ளது.

திரங்கானுவை அடுத்து மலாக்கா, புத்ரா ஜெயா, பெர்லிஸ், லாபுவான் கூட்டரசு பிரதேசம் ஆகியவை குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களாக  உள்ளதாக தேசிய புள்ளிவிபரத்துறை தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது ஊஸிர் மாஹிடின் கூறினார்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் திரங்கானு மாநிலத்தின் மக்கள் தொகை 11 லட்சத்து 50 ஆயிரம் பேராக மட்டுமே இருந்தது. இது 3 கோடியே 24 லட்சமாக உள்ள நாட்டின் மக்கள் தொகையில் 3 விழுக்காடு மட்டுமே ஆகும் என அவர் சொன்னார்.

குறைவான மக்கள் தொகையைக் கொண்ட மாநிலமாக திரங்கானு விளங்குகிறது. இங்கு வருடாந்திர மக்கள் தொகை வளர்ச்சி சரிவு கண்டு வருகிறது. இம்மாநில மக்கள் பொருளாதார வாய்ப்புகளைத் தேடி வேறு மாநிலங்களுக்குச் செல்வதே இதற்கு காரணமாகும் என்றார் அவர்.

எனினும், மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள 2030 செஜாத்ரா பெருந்திட்டம் மூலம் மாநிலத்தில் கூடுதல் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் சாத்தியம் உள்ளதால் இந்நிலை மாறுவதற்குரிய வாய்ப்பு உள்ளது என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :