ECONOMYNATIONAL

பிளஸ் நெடுஞ்சாலையில் தாப்பா-பீடோர் இடையே இடது மற்றும் அவசரத் தடங்கள் 5 நாட்களுக்கு மூடப்படும் 

ஈப்போ, ஜூன் 23- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின்  தாப்பா முதல் பீடோர் வரையிலான பகுதியின் இடது மற்றும் அவசரத் தடங்கள் வரும் ஜூன் 27 ஆம் தேதி  முதல் ஜூ 1 ஆம் தேதி வரை போக்குவரத்துக்கு மூடப்படும்.

சாலை பராமரிப்புப் பணிகளுக்காக அவ்விரு தடங்களும் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்படுவதாக பிளஸ் மலேசியா பெர்ஹாட் (பிளஸ்) நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.

அந்த நெடுஞ்சாலையின் 338.20 கிலோமீட்டர் முதல் 339.25 கிலோ மீட்டர் வரையிலான பகுதியின் வலது தடம் வாகனப் போக்குவரத்துக்கு திறந்திருக்கும் என்பதோடு தேவையின் அடிப்படையில் அவசரத் தடம் அவ்வப்போது போக்குவரத்துக்கு திறக்கப்படும் என அது தெரிவித்தது.

நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவோரின் வசதி மற்றும் பாதுகாப்புக்கு பிளஸ் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வந்துள்ளதோடு இந்நோக்கத்திற்காக பல்வேறு முயற்சிகளையும் திட்டங்களையும் அது அமல்படுத்தி வருகிறது.

பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் காலக்கட்டத்தில் தெற்கு நோக்கி பயணிக்கும் வாகனமோட்டிகள் தங்கள் பயணத்தை திட்டமிடும் அதே வேளையில் போக்குவரத்து தொடர்பான ஆகக்கடைசி நிலவரங்களை பிளஸ் செயலி வாயிலாக அறிந்து கொள்ளும்படியும் அது கேட்டுக் கொண்டது.

போக்குவரத்து தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கும் அவசர உதவி பெறுவதற்கும் 1800-88-0000 என்ற பிளஸ்லைன் எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அந்நிறுவனம் ஆலோசனை கூறியது.


Pengarang :