ECONOMYPENDIDIKANSELANGOR

அனைத்துலகப் போட்டியில் கம்போங் ஜாவா பள்ளி வெற்றி பெற மாநில அரசு உதவும்

ஷா ஆலம், ஜூன் 23– உலகின் தலைசிறந்த பத்து பள்ளிகளில் ஒன்றாகத் தேர்வு பெற்றுள்ள கிள்ளான், கம்போங் ஜாவா தேசிய இடைநிலைப் பள்ளியில்  தரம் உயர்த்தும் பணிகளை மாநில அரசு ஒருங்கிணைக்கும்.

“சவால்களை வெற்றி கொள்வது“ எனும் பிரிவில் இடம் பெற்றுள்ள இப்பள்ளி வெற்றியாளராகத் தேர்வு பெறுவதற்கு தேவையான புள்ளிகளைப் பெற இந்த உதவி துணை புரியும் என்று சுங்கை காண்டீஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடன் அப்பள்ளி நிர்வாகத்தினர் இன்று காலை நடத்திய சந்திப்பின் போது இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

அப்பள்ளியில் மேற்கொள்ளப்படும் செயலாக்க நடவடிக்கைகள் சுங்கை காண்டீஸ் தொகுதி சேவை மையத்தை உள்ளடக்கியதாக இருக்கும். அந்த பள்ளியைக் கௌரவிக்கும் வகையில் மந்திரி புசார் 10,000 வெள்ளியை வெகுமதியாக வழங்கினார் என்றார் அவர்.

மொத்தம் 250,000 அமெரிக்க டாலரை உள்ளடக்கிய இந்த போட்டியை ஹசானா அறவாரியம், டெம்ப்ளேட்டன் அனைத்துலக அறக்கட்டளை, எக்சென்ஸ்யர் மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆகிய  நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

சமூக ஒருங்கிணைப்பு, சுற்றுச்சூழல் நடவடிக்கை, புத்தாக்கம், சவால்களை வெற்றி கொள்வது மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறைக்கு உதவுவது ஆகிய ஐந்து பிரிவுகளில் இப்போட்டி நடைபெறுகிறது.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு பெறும் வெற்றியாளருக்கு தலா 50,000 அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும். வரும் அக்டோபர் 16 முதல் 21 வரை நடைபெறும் அனைத்துலக கல்வி வாரத்தின் போது இப்போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.

இப்போட்டியில் கம்போங் ஜாவா இடைநிலைப் பள்ளி தவிர்த்து குவாந்தான் கெம்பாடாங் தேசிய பள்ளி புத்தாக்கப் பிரிவில் தேர்வாகியுள்ளது.


Pengarang :