ECONOMYSELANGOR

மின்னியல் சாதன உதிரிபாகங்களை பிரித்தெடுக்கும் கிடங்குகள் மீது சுற்றுச்சூழல் துறை நடவடிக்கை

ஷா ஆலம், ஜூன் 23- பயன்படுத்தப்படாத மின்னியல் மற்றும் மின்சார சாதனங்களின் உதிரிப் பாகங்களை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு மூன்று கிடங்குகளை உடனடியாக மூட சிலாங்கூர் மாநில சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டது.

அந்த கிடங்குகள் மீது தாங்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட போது வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மின்சார மற்றும் மின்னியல் சாதனங்களிலிருந்து உதிரிபாகங்களை பிரித்தெடுக்கும் பணியில் அந்நியத் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டிருந்ததாக  அத்துறையின்  இயக்குநர் நோர் அஜிசா ஜாபர் கூறினார்.

அப்பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஒன்று செய்த புகாரின் பேரில் இந்த ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கிடங்குகளுக்கு எதிராக 1974 ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் சட்டத்தின் 34ஏ, 34பி, 18 மற்றும் 19வது பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த கிடங்குகள் சில மாதங்களுக்கு முன்பிருந்து  செயல்பட்டு வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மின்னியல் பொருள்களை பிரித்தெடுக்கும் பணிக்காக அந்த தொழிற்சாலை அந்நிய நாட்டவருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது என்றார் அவர்.

அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட கிடங்குகளின்  உரிமையாளர்களிடம் தாங்கள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :