ECONOMYNATIONAL

இ.சி.ஆர்.எல். இரயில் திட்டம் 30 விழுக்காடு பூர்த்தி- அமைச்சர் தகவல்

பெந்தோங், ஜூன் 24- கிழக்குக் கரை இரயில் தண்டவாளத் திட்டப் பணிகள்(இ.சி.ஆர்.எல்.) கடந்த மே மாதம் வரை 30 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறினார்.

இவ்வாண்டு இறுதிக்குள் 37 விழுக்காட்டு பணிகளை பூர்த்தி செய்யும் இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கையை இந்த அடைவு நிலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.

கோத்தா பாரு முதல் டுங்குன் வரையிலான ஏ பிரிவு, டுங்குன் முதல் மெந்தகாப் வரையிலான பி பிரிவு, மெந்தகாப் முதல் கோலக் கிள்ளான் வரையிலான சி பிரிவு ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் சிறப்பான மேம்பாட்டைக் கண்டு வருவதாக அவர் சொன்னார்.

இந்த திட்டத்தின் ஏ,பி மற்றும் சி பிரிவுகளில் கட்டுமானப் பணிகள் ஏக காலத்தில் மேற்கொள்ளப்படுவதாக கூறிய அவர், அந்த 665 கிலோ மீட்டர் தடத்தில் சுமார் 300 இடங்களில் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

கெந்திங் இ.சி.ஆர்.எல். பகாங் பகுதியில் சுரங்கப் பாதையை குடையும் பணியின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இப்பணியை தொடக்கி வைத்தார்.


Pengarang :