ECONOMYSELANGOR

முக்கிய இடங்களில் 45,760 இடாமான் வீடுகள் நிர்மாணிக்கப்படும்

காஜாங், ஜூன் 26- மாநிலத்திலுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மேற்கொள்ளப்படும் 24 வீடமைப்புத் திட்டங்களின் வாயிலாக மொத்தம் 45,760 வீடுகளை பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட் நிறுவனம் நிர்மாணிக்கும்.

கோம்பாக், சிப்பாங், கோல லங்காட், கிள்ளான், பெட்டாலிங், கோல சிலாங்கூர், சபாக் பெர்ணம் உள்ளிட்ட பகுதிகளில் அந்த வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ராஜா அகமது ஷாரிர் கூறினார்.

குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் மற்றும் நடுத்தரத் தரப்பினரின் (எம்40) சொந்த வீடு பெறும் கனவு இத்திட்டத்தின் மூலம் நனவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது மூன்று வீடமைப்புத் திட்டங்களின் மூலம் 4,631 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளில் ஏறக்குறை அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளதானது இத்திட்டத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை புலப்படுத்துவதாக உள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

மக்கள் மீது மாநில அரசு கொண்டுள்ள கடப்பாட்டை இந்த இத்திட்டங்கள் புலப்படுத்துகின்றன. ஆகவே, சொந்த வீட்டைப் பெறுவதற்கு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

இங்குள்ள பங்சாபுரி இடாமான் அபாடி காஜாங் 2 திட்டத்தில் வீடு வாங்கிய 2,059 பேரில் 10 பேரிடம் வீட்டிற்கான சாவியை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :