ECONOMYNATIONAL

நாட்டிற்குள் கஞ்சா கடத்தி வரப்படுவதை தடுக்க எல்லைகளில் தீவிர பாதுகாப்பு

சொங்க்லா, ஜூன் 26- கஞ்சா போதைப் பொருள் உள்பட தடை செய்யப்பட்ட பொருள்கள் நாட்டிற்குள் கடத்தி வரப்படுவதை தடுக்க அரச மலேசிய சுங்கத் துறை நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தவுள்ளது.

இந்நோக்கதிற்காக மலேசிய-தாய்லாந்து எல்லையைக் கடக்கும் அனைத்து பயணிகள் மற்றும் வாகனங்கள்  மீதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்படும் என்று சுங்கத் துறையின் புக்கிட் காயு ஹீத்தாம் அமலாக்கப் பிரிவுத் தலைவர் சுஹாய்லா முகமது நோர் கூறினார்.

கஞ்சா மலேசியாவில் தடைசெய்யப்பட்ட பொருள் என்பதை மக்களுக்கு தொடர்ந்து வலியுறுத்த விரும்புகிறோம். கஞ்சாவை போதைப் பொருள் பட்டியலிலிருந்து தாய்லாந்து அகற்றிய போதிலும் அதனை நாட்டிற்குள் கொண்டு வரமுடியாது என்பதை அவர்களுக்கு உணர்த்தவிருக்கிறோம் என்றார் அவர்.

போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை துடைத்தொழிப்பதற்கு ஏதுவாக இரு நாடுகளுக்குமிடையே அணுக்கமான ஒத்துழைப்பை நல்குவது தொடர்பில்  தாய்லாந்து சுங்கத் துறையின் சொங்க்லா பகுதிக்கான அமலாக்கத் தலைவர் தாவால் ரோட்ஜிட்டுடன் கடந்த வெள்ளியன்று தாம் சந்திப்பு நடத்தியதாகவும் சுஹாய்லா சொன்னார்.

இரு நாடுகளின் எல்லைகளும் திறக்கப்பட்டப் பின்னர் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இரு நாடுகளின் சுங்கத் துறை தலைவர்களும் சந்திப்பு நடத்துவது இதுவே முதன் முறையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

போதைப் பொருள் பட்டியலிலிருந்து கஞ்சாவை அகற்றிய முதல் ஆசிய நாடாக தாய்லாந்து விளங்குகிறது. அந்நாட்டில் வீடுகளில் கஞ்சா செடியை வளர்க்க அனுமதி வழங்கப்படுகிறது.


Pengarang :