ECONOMYSELANGOR

கோல லங்காட் மாவட்ட தொழில் முனைவோருக்கு ஹிஜ்ரா மூலம் வெ.34.2 லட்சம் கடனுதவி

கோல லங்காட், ஜூன் 26- இவ்வாண்டு ஜனவரி முதல் நேற்று முன்தினம் வரை கோல லங்காட் மாவட்டத்திலுள்ள தொழில் முனைவோருக்கு யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் மூலம் 34 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி வர்த்தகக் கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

ஹிஜ்ரா அறவாரியம் அறிமுகப்படுத்தியுள்ள ஐ.பிஸ்னஸ், ஜீரோ டு ஹீரோ, நியாகா டாருள் ஏசான் (நாடி), கோ டிஜிட்டல், ஐ-லெஸ்தாரி, ஐ-அக்ரோ, ஐ-பெர்மூசிம் ஆகிய ஏழு திட்டங்கள் வாயிலாக இந்த கடனுதவி வழங்கப்பட்டதாக தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

கோல லங்காட் வட்டாரத்திலுள்ள வணிகர்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தி கூடுதல் வருமானம் பெறுவதற்குரிய  வாய்ப்பினை இந்த கடனுதவித் திட்டம் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தில் பங்கேற்ற 40 விழுக்காட்டு விண்ணப்பதாரர்களின் வருமானம் ஒரு லட்சம் வெள்ளியைத் தாண்டி விட்டதாக அவர் அவர் சொன்னார்.

வணிகர்கள் தங்கள் வர்த்தக விரிவாக்கத்திற்கு கடனுதவி பெறுவதற்கான உகந்த சூழலை நாங்கள் ஏற்படுத்தித் தந்துள்ளோம். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக ஹிஜ்ரா தரப்பினரை விரைந்து தொடர்பு கொள்ளும்படி வர்த்தகர்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

இங்குள்ள மோரிப் சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்ட அறிமுக நிகழ்வில் 20 தொழில்முனைவோருக்கு வர்த்தக கடனுதவியை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


Pengarang :