ECONOMYSELANGOR

ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பீர்- அன்வார் வலியுறுத்து

கோல லங்காட், ஜூன் 26- குறைந்த வருமானம் பெறும் தரப்பினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்படி அனைத்து  மாநிலங்களிலும் உள்ள தலைவர்களை டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிலாங்கூர் மாநிலத்தை உதாரணம் காட்டிய எதிர்க்கட்சித் தலைவருமான அவர், ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை  உயர்த்துவதில் அம்மாநிலத் தலைவர்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர் என்றார்.

தலைவர்களாக ஆக வேண்டுமானால் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது அவர்களின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும். மக்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டுமே தவிர அவர்களை அடிமையாக்கக் கூடாது. தவிர, ஆதரவற்றவர்களையும் ஏழைகளையும் காக்கக்கூடியவர்களாக அவர்கள் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மந்திரி புசார் என்ற முறையில் மக்களின் நம்பிக்கையையும் நலனையும் காக்க வேண்டும். அவர்களின் கௌரவத்தை உயர்த்தும் அதே வேளையில் பிரச்னைகளையும் தீர்க்க வேண்டும் என்றார் அவர்.

இங்குள்ள டத்தாரான் மெர்டேக்காவில் நேற்று நடைபெற்ற ஜெலாஜா ஹராப்பான் சிலாங்கூர் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் நலனைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தால் சம்பந்தப்பட்ட தலைவர் மாற்றத்தை ஏற்படுத்துவதில் தோல்வி கண்டவராக கருதப்படுவார் எனவும் அவர் சொன்னார்.

நன்மையை இலக்காக கொண்ட மாற்றத்தை நாம் விரும்புகிறோம். இதைத்தான் இப்போது நாம்  செய்து வருகிறோம். மனிதாபிமானம்தான் பக்கத்தான் ஹராப்பானின் கோட்பாடாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :