ECONOMYNATIONAL

பொழுதுபோக்கு மையங்களில் சோதனை- 9 கிலோ போதைப் பொருள் பறிமுதல், 504 பேர் கைது

கோலாலம்பூர், ஜூன் 27- இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு மையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 9,208.81 கிராம் போதைப் பொருள் மற்றும் 450 லிட்டர் திரவ வடிவிலான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதோடு 504 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அவற்றில் 5,135.57 கிராம் போதைப் பொருள், 450 லிட்டர் திரவ போதைப் பொருள் மற்றும் 160 பேர் தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பிடிப்பட்டதாக அரச மலேசிய போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நேர்ஷியா முகமது சஹாடிடுடின் கூறினார்.

மாநகரில் கைது செய்யப்பட்ட அந்த 160 பேரும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம் உள்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தலைநகரில் 15 பொழுதுபோக்கு மையங்கள் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வருவதாக மலேசிய குற்றச்செயல் மீதான சமூக பரிவு அமைப்பு ஒன்று வெளியிட்ட தகவலை அரச மலேசிய போலீஸ் படை கவனத்தில் கொண்டுள்ளது.

நாட்டில் போதைப் பொருள் விநியோகம் மற்றும் அதனைத் தவறாகப் பயன்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக காவல் துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் 194 சோதனை நடவடிக்கைகளை அது மேற்கொண்டுள்ளது. இது தவிர, ஒழுங்கீனச் செயல்களைத் தடுப்பதற்காக குற்றப்புலனாய்வுத் துறை ஓப்ஸ் நாடா நடவடிக்கையின் கீழ் உடம்புபிடி நிலையங்கள், தங்கும் விடுதிகள், பொழுது போக்கு மையங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நாடு முழுவதும் 995 சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் விபசாரம் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் ஒழுங்கீனச் செயல்கள் தொடர்பில் 2,948 பேர் கைது செய்யப்பட்டனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.


Pengarang :