ECONOMYSELANGOR

மாபெரும் வேலை வாய்ப்பு பெருவிழாவை மாநில அரசு மீண்டும் நடத்தும்

ஷா ஆலம், ஜூன் 27- இவ்வாண்டு ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதம் மாபெரும் வேலை வாய்ப்பு பெருவிழா மறுபடியும் நடத்தப்படும் என்று இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

அதிகமான முதலாளிகளும் வேலை தேடுவோரும் பங்கேற்பதற்கு ஏதுவாக இச்சந்தையை நடத்துவதற்கான பொருத்தமான இடத்தை தாங்கள் தேடி வருவதாக அவர் சொன்னார்.

கடந்த மாத தொடக்கத்தில் ஷா ஆலம் மாநகர் மன்ற மாநாட்டு மையத்தில் நடைபெற்ற மெகா வேலை வாய்ப்பு பெருவிழாவுக்கு கிடைத்த அமோக ஆதரவைத் தொடர்ந்து இரண்டாம் முறையாக அத்தகைய நிகழ்வை நடத்துவதற்கு தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இம்முறை பல்வேறு துறைகளைச் சேர்ந்த மேலும் அதிகமான முதலாளிகள் இதில் பங்கேற்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். இதன் வழி வேலை தேடுவோருக்கு அதிகமான தேர்வுகள் இருக்கும் என்றார் அவர்.

கடந்த ஜூன் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெற்ற அந்த மெகா வேலை வாய்ப்பு பெருவிழாவில் அரசு சாரா அமைப்புகள், அரசு நிறுவனங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு கொண்டன. இந்த திட்டத்தின் போது சுமார் 20,000 வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

இந்த வேலை வாய்ப்பு பெருவிழாவில் நேர்முகப் பேட்டிகளில் கலந்து கொண்ட பலருக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைத்தது.

இவ்வாண்டில் வேலையில்லாப் பிரச்னையை மூன்று விழுக்காடாக குறைக்க மாநில அரசு இலக்கு கொண்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மே 12 ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :