ECONOMYSELANGOR

பாலத்திலிருந்து குதிக்கும் வீரதீர விளையாட்டு- நிறுவனத்திற்கு எம்.பி.எச்.எஸ் அபராதம்

உலு சிலாங்கூர், ஜூன் 28- இங்குள்ள கோல குபு பாருவில் பாலத்திலிருந்து கயிற்றின் மூலம் குதிக்கும் வீரதீர விளையாட்டை ஏற்பாடு செய்த நிறுவனம் ஒன்றின் உபகரணங்களை உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் (எம்.பி.எச்.எஸ்.) பறிமுதல் செய்துள்ளது.

அனுமதியின்றி அத்தகைய விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தொடர்பில் புகார் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து பொதுப் பணித்துறை மற்றும் காவல் துறையின் ஒத்துழைப்புடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நகராண்மைக் கழகத் தலைவர் முகமது ஹஸ்ரி நோர் முகமது கூறினார்.

சம்பவ இடத்தில் நாங்கள் மேற்கொண்ட சோதனையில் கயிறு மூலம் பாலத்திலிருந்து குதிக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்தது. எனினும், பெர்த்தாக் ஆற்றுப் பாலத்தில் போக்குவரத்தின் ஒரு பகுதியை மறைக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த கேபின் ஒன்றில் அதற்கான உபகரணங்கள் இருந்தன என்று அவர் சொன்னார்.

இந்நடவடிக்கையின் போது சம்பந்தப்பட்ட நிறுவனம் புரிந்த குற்றம் தொடர்பில் அதன் நிர்வாகியிடம் தெரிவிக்கப்பட்டது. தங்களின் தவற்றை ஒப்புக் கொண்ட அந்நிறுவனம் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்வரை தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க ஒப்புக் கொண்டது என்றார் அவர்.

சாலையில் தடையை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கோன்கள் உள்ளிட்ட பொருள்களை தாங்கள் பறிமுதல் செய்த தோடு பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக அந்நிறுவனத்திற்கு அபராதமும் விதிக்கப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :