ECONOMYSELANGOR

மாநில அரசின் மக்கள் நலத்திட்ட அறிமுக விழா- சனிக்கிழமை கோல சிலாங்கூரில் நடைபெறும்

ஷா ஆலம், ஜூன் 28- மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதை நோக்கமாக கொண்ட “ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங்“ திட்டம் வரும் சனிக்கிழமை கோல சிலாங்கூரில் நடைபெறவுள்ளது.

காலை 8.00 மணி தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார்.

மாநில மக்களின் நலனுக்காக அரசு அமல்படுத்தியுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கிலான இந்த நிகழ்வில் மாநில அரசின் 23 துணை நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

மேலும் அதிகமானோர் பயன்பெறும் வகையில் பெடுலி ராக்யாட் (ஐ.பி.ஆர்.) திட்டத்திற்கு பதிலாக 35 கோடி வெள்ளி ஒதுக்கீட்டில் மாநில அரசு இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கிஸ் எனப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் அன்னையர் பரிவுத் திட்டத்திற்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டமும் (பிங்காஸ்) அதில் அடங்கும். கிஸ் திட்டத்தின் வாயிலாக 25,000 பேர் மட்டுமே பயன்பெற்று வந்த வேளையில் பிங்காஸ் திட்டத்தின் மூலம் 30,000 பேர் வரை பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.

இந்த நிகழ்வுக்கு மேலும் மெருகூட்டும் வகையில் கலைநிகழ்ச்சி, ஏரோபிக், மக்கள் விளையாட்டு, சமையல் போட்டி, இரத்த தானம் போன்ற நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, சிலாங்கூர் வறுமை ஒழிப்பு பெருந்திட்ட (புளுபிரிண்ட்) உதவி, சிறு தொழில் கடனுதவி, புஸ்பானித்தா நிகழ்வு, சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம் ஆகியவையும் நடத்தப்படும்.


Pengarang :