ECONOMYSELANGOR

போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி-  இரு சகோதரர்கள் கைது

ஷா ஆலம், ஜூன் 29 –  போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் மதுபானக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் இரண்டு உடன்பிறப்புகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்தது.

நேற்று காலை 10.00 மணியளவில் காவல் துறை மற்றும் எம்.ஏ.சி.சி. மேற்கொண்ட நடவடிக்கையில் 40 வயதுடைய இரு  சந்தேக நபர்களும் கோலாலம்பூரில் உள்ள அவர்களது வணிக வளாகத்தில் கைது செய்யப்பட்டனர்.

வரி செலுத்தப்படாத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக நம்பப்படும் சந்தேக நபர்கள் இருவரும்  1967 ஆம் ஆண்டு சுங்கத் துறை சட்டத்தின்  135 (1) (இ) பிரிவின்  கீழ் தங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமலிருப்பதற்காக அந்த உயர் போலீஸ்  அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அவ்விரு சகோதரர்களும் கைது செய்யப்பட்டதை சிலாங்கூர் எம்.ஏ.சி.சி. இயக்குநர் டத்தோ அலியாஸ் சலீம்  உறுதிப்படுத்தினார். மேலும் இந்த வழக்கு 2009 ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் பிரிவு 17 (பி) இன் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் சொன்னார்.


Pengarang :