ECONOMYSELANGOR

கார்ஸம் அகாடமியின் பயிற்சி, வேலை வாய்ப்புத் திட்டம்- சனி மற்றும் ஞாயிறன்று கிள்ளானில் நடைபெறும்

ஷா ஆலம். ஜூன் 29– எஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களுக்கு வாகன பழுதுபார்ப்பு மற்றும் அலுவலக நிர்வாகத் துறைகளில் பயிற்சி பெறுவதற்குரிய வாய்ப்பினை கார்ஸம் அகாடமியுடன் இணைந்து தொழிலாளர் ஆக்கத்திறனளிப்பு பிரிவு (யு.பி.பி.எஸ்.) வழங்குகிறது.

இந்த நிகழ்வு வரும் ஜூலை 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் கிள்ளான், ஜாலான் துங்கு கிளானா, எம்.பி.கே. மினி ஆடிடோரியத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

இந்த பயிற்சித் திட்டம் கார்ஸம் அகாடமியின் ஒத்துழைப்புடன் நடத்தப்படுகிறது. இணையம் வழி பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் நாடு முழுவதும் 71க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சித் திட்டத்தில் 70 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும். இத்திட்டத்தில் பங்கேற்போர் 18 முதல் 25 வயது வரையிலானவர்களாகவும் பிடி3/எஸ்.பி.எம். தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் வாசிப்பு, எழுத்து  மற்றும் கூட்டல் கணக்கு தெரிந்தவர்களாகவும் இருத்தல் அவசியம்.

தொழில்திறன் மேம்பாட்டு இலாகாவின் அங்கீகாரம் பெற்ற இப்பயிற்சித் திட்டத்தில் பங்கேற்போருக்கு 3ஆம் நிலை மலேசிய தொழில்திறன் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பங்கேற்போருக்கு ஓராண்டு காலப் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை முடித்தவர்களுக்கு கார்ஸம் நிறுவன கிளைகளில் 100 விழுக்காடு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்பதோடு அவர்கள் மாதம் 2,000 வெள்ளி வரையிலான சம்பளம் மற்றும் 300 வெள்ளி அலவன்ஸ் பெறுவதற்குரிய வாய்ப்பினையும் பெறுவர்.


Pengarang :