ECONOMYNATIONAL

2019 முதல் தலைநகரிலுள்ள 599 கேளிக்கை மையங்களில் போதைப் பொருள் சோதனை- காவல் துறை தகவல்

கோலாலம்பூர், ஜூன் 29- போதைப் பொருள் கடத்தல் மற்றும் துஷ்பிரயோகத் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 2019 முதல் நேற்று வரை மாநகரிலுள்ள 599 கேளிக்கை மையங்கள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சோதனைகளின் போது போதைப் பொருள் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 2,148 பேர் கைது செய்யப்பட்டதோடு 6.1 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம் கூறினார்.

இவ்வாண்டில் மட்டும் இத்தகைய சோதனை நடவடிக்கைகளின் வாயிலாக 160 பேர் கைது செய்யப்பட்டதோடு 5 கிலோ போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது என அவர் சொன்னார்.

அதோடு மட்டுமின்றி, இச்சோதனைகளின் போது 1988 ஆம் ஆண்டு தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கேளிக்கை மையங்களுக்கு 10 லட்சம் வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

போதைப் பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்திற்காக அக்காலக்கட்டத்தில் 15 கேளிக்கை மையங்கள் மூடப்பட்டன என்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

தலைநகரிலுள்ள 15 கேளிக்கை மையங்கள் போதைப் பொருள் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முன்னாள்  தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ மூசா ஹசான் கூறியுள்ளது குறித்து கருத்துரைத்த டத்தோ அஸ்மி, இவ்விவகாரம் தொடர்பில் எந்த தரப்பினரும் தகவல் தருவதை தாங்கள் வரவேற்பதாகக் கூறினார்.


Pengarang :