ANTARABANGSAECONOMY

அந்நியத் தொழிலாளர் குடியிருப்புகளை அதிகளவில் நிர்மாணிக்க பி.கே.என்.எஸ். தயார்

காஜாங், ஜூன் 30- சிலாங்கூரில் சட்டப்பூர்வமாக வேலை செய்யும் அந்நியத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு வளாகங்களை மேலும் அதிகளவில் நிர்மாணிக்க சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (பி.கே.என்.எஸ்.) தயாராக உள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரஜைகள் அல்லாத தொழிலாளர்களுக்கான தங்குமிட  தேவை அதிகரித்து வருவதாக அக்கழகத்தின் நிர்வாகப் பிரிவுத் தலைமை நிர்வாகி ஷாரோம் மோஹ்னி கூறினார்.

நாட்டில் குறிப்பாக உற்பத்தி, மேம்பாடு மற்றும் வீட்டுப் பணிப்பெண் துறைகளில் அதிகமான அந்நிய நாட்டினர் வேலை செய்வதற்குரிய வாய்ப்பு சட்ட விதிகளுக்கேற்ப வழங்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அடிப்படை வசதிகள் கொண்ட தங்கும் விடுதிகளை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குத்தகையாளர்களுடன் நாங்கள் அணுக்கமாக ஒத்துழைக்கவுள்ளோம். அந்நியத் தொழிலாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் வசிக்க வேண்டும் என நாங்கள் விரும்புவதால் இத்தகைய விடுதி நிர்மாணிப்பில் கண்காணிப்பு அதிகரிக்கப்படும் என்றார் அவர்.

வெகு தொலைவில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் வேலையிடத்திற்கு வருவதற்கு  45 நிமிடங்கள் வரை தேவைப்படுவது பொருளாதார ரீதியாக உகந்ததாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பண்டார் பாரு பாங்கியிலுள்ள ஸ்ரீ ஆயு அடுக்குமாடி குடியிருப்பை பார்வையிட வந்த 20 இந்தோனேசிய ஊடகவியலாளர்களை வரவேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இது வரை, இந்தோனேசியா, வியட்னாம், மியன்மார், பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சிறிய எண்ணிக்கையிலான உள்நாட்டினருக்காக இரு தங்கும் விடுதிகளை பி.கே.என்.எஸ். நிர்மாணித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :