MEDIA STATEMENTNATIONAL

மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறையா? சுகாதார அமைச்சு மறுப்பு

கோலாலம்பூர், ஜூலை 2- கோலாலம்பூர் மருத்துவமனை மற்றும் துங்கு அஜிசா மருத்துவமனையில் மருத்துவ அதிகாரிகள் பற்றாக்குறைப் பிரச்னை எழவில்லை என்று சுகாதார அமைச்சு கூறியது.

கோலாலம்பூர் மருத்துவமனையிலிருந்து இம்மாதம் 18 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்படும் மருத்துவர்களின் பணியிட மாற்றம் காரணமாக அவ்விரு மருத்துவமனைகளிலும் மருத்துவ அதிகாரிகள் பற்றாக்குறை ஏற்படும் என கோலாலம்பூர் மருத்துவமனையிலிருந்து வெளியிடப்பட்ட கடிதம் தொடர்பில் சுகாதார அமைச்சு  இந்த விளக்கத்தை அளித்தது.

வரும் ஜூலை 18 ஆம் தேதி கோலாலம்பூர் மருத்துவமனை மற்றும் துங்கு அஜிசா மருத்துவமனைகளிலிருந்து மருத்துவர்கள் வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவதைத் தொடர்ந்து அதே தினத்தில் வேறு மாநிலங்களிலிலுள்ள மருத்துவ அதிகாரிகளை இவ்விரு மருத்துவமனைகளிலும் பணியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

உத்தரவின் அடிப்படையிலும் வேண்டுகோளின் பேரிலும் மருத்துவ அதிகாரிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது அடிக்கடி மேற்கொள்ளப்படும் வழக்கமான நடவடிக்கையாகும் என்றும் அது தெளிவுபடுத்தியது.

மருத்துவ சேவையில்  குறிப்பாக அவசர சிகிச்சைத் துறையில் சேவையின் தரத்தை உயர்த்தும் நோக்கில் சுகாதார அமைச்சு இத்தகைய உள்சீரமைப்பு நடவடிக்கைகளை அடிக்கடி மேற்கொண்டு வருகிறது என்றும்  அவ்வறிக்கை மேலும் தெரிவித்த து.


Pengarang :