ECONOMYSELANGOR

குறைந்த, நடுத்தர வருமானம் பெறுவோரை அலைகழிக்கும் விலைவாசி உயர்வு

ஷா ஆலம், ஜூலை 4- இம்மாதம் 1 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் தரப்பினரை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது.

குறிப்பாக பெரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களை இந்த விலைவாசி உயர்வு கடுமையாகப் பாதித்துள்ளது. அத்தியாவசியப் பொருள்களை வாங்க அவர்கள் அதிகம் செலவிட வேண்டியுள்ளது  என்று ஆஸ்ட்ரோ அவானி கூறியது.

ஐம்பது வெள்ளியுடன் மார்கெட் சென்ற தமக்கு கோழி மற்றும் மீன் ஆகிய இரு பொருள்களை வாங்குவதற்கு மட்டுமே அத்தொகை போதுமானதாக இருந்ததாக இல்லத்தரசியான வான் மஸ்னா வான் அப்துல்லா கூறினார்.

அனைத்துப் பொருள்களும் விலையேற்றம் கண்டுள்ளது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது என்று திரங்கானுவின் டுங்குன் சந்தையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

போத்தலில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் விலை சிறிதும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்று அரசு ஊழியரான அஸ்மான் முகமது நோர் சொன்னார்.

இந்த சமையல் எண்ணெய் விலையேற்றத்தை உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு கண்காணிக்க வேண்டும். அந்த உணவுப் பொருளின் விலையேற்றம் சிறிதும் நியாயமற்றது. பயனீட்டாளர் என்ற முறையில் இந்த விலையேற்றத்தை நாம் மிகவும் கடுமையாக கருதுகிறேன் என்றார் அவர்.

இம்மாதம் முதல் தேதி தொடங்கி நடுத்தர கோழியின் விலை கிலோ ஒன்றுக்கு வெ. 9.40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஏ கிரேட் முட்டை 45 காசாகவும் பி கிரேட் முட்டை 43 காசாகவும் சி கிரேட் முட்டை 41 காசாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Pengarang :