ECONOMYSELANGOR

மக்கள் மருத்துவ, சமூக நல உதவிகளைப் பெறுவதில் ஐ.எஸ்.பி. திட்டம் பேருதவி- மந்திரி புசார்

கோல லங்காட், ஜூலை 4- மக்களின் சுபிட்சம் மற்றும் நல்வாழ்வுக்காக இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் (ஐ.எஸ்.பி.) திட்டத்தின் கீழ் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை  அறிமுகப்படுத்தியுள்ளது.

மக்கள்  மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு நோய்க்கான அறிகுறிகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ள உதவும்  சிலாங்கூர் சாரிங் உள்பட பல்வேறு திட்டங்களை ஐ.எஸ்.பி. உள்ளடக்கியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சுகாதாரப் பரிசோதனையை மேற்கொள்வது மட்டுமின்றி அச்சோதனையில் நோய்க்கான அறிகுறி தென்படும் பட்சத்தில் முன்கூட்டியே சிகிச்சைப் பெறுவதற்கு ஏதுவாக இவ்வாண்டில் சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் அரசியல் இனிப்பை வழங்க விரும்பவில்லை. பரிவுமிக்க அரசாங்கம் என்ற முறையில் மக்கள் வாழ்க்கைத் தரத்தை முழுமையாக மேம்படுத்துவதில் முனைப்பு காட்டுகிறோம் என்றார் அவர்.

அமானா கட்சியின் பொருளாதாரப் பிரிவின் ஏற்பாட்டில் இங்குள்ள கோல லங்காட் கூடைப் பந்து சங்க மண்டபத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு சொன்னார்.

மக்களின் ஆரோக்கியமான நல்வாழ்வை உறுதி செய்வதற்காக ஐ.எஸ்.பி. சுகாதாரத் தொகுப்பின் கீழ் 6 கோடியே 70 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக கடந்த 2 ஆம் தேதி கோல சிலாங்கூரில் நடைபெற்ற ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் அமிருடின் கூறியிருந்தார்.

இல்திஸாம் சிலாங்கூர் சேஹாட், இருதய சிகிச்சை, பந்துவான் சேஹாட் சிலாங்கூர், சாரிங் சிலாங்கூர், புற்று நோய் சோதனை, சிறார் ஊட்டச் சத்துணவுத் திட்டம், மன நலப் பரிசோதனை,  காசநோய் சிகிச்சை, கண் சிகிச்சை, மகளிர் மருத்துவ சோதனை உள்ளிட்ட பத்து முதன்மை திட்டங்களை இல்திஸாம் சிலாங்கூர் சேஹாட் திட்டம் உள்ளடக்கியுள்ளது.


Pengarang :