ECONOMYNATIONAL

இணையம் வழி சமையல் எண்ணெய் விற்பனை- இரு நிறுவனங்கள் மீது அதிரடிச் சோதனை

புத்ராஜெயா, ஜூலை 4– பிரபல மின் விற்பனைத் தளத்தின் வாயிலாக சமையல் எண்ணெயை இணைய விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் பெட்டாலிங் ஜெயா மற்றும் பூச்சோங்கில் உள்ள இரு  நிறுவனங்கள் மீது உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் கடந்த ஜூலை முதல் தேதி அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

1961 ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் புரியப்பட்ட இக்குற்றம் தொடர்பில் அந்த அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சின் அமலாக்கப் பிரிவு இயக்குநர் அஸ்மான் ஆடாம் கூறினார்.

பெட்டாலிங் ஜெயாவிலுள்ள வீடொன்றிலிருந்தும் பூச்சோங்கில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கடையிலிருந்தும் இந்த சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

அந்த சமையல்  எண்ணெயை பொட்டலமிட்டு இணையம் வாயிலாக விற்பனை செய்யும் மையமாக அவ்விரு இடங்களும் பயன்படுத்தப்பட்டு வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்  255 கிலோ எடை கொண்ட ஒரு கிலோ சமையல் எண்ணைய் பாக்கெட்டுகளும் இதர சில்லறைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த சமையல் எண்ணெய் பாக்கெட் ஒன்று வெ.2.50 விலையில் விற்கப்பட்டது தொடக்க க்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார் அவர்.

பூச்சோங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 1 கிலோ, 2 கிலோ மற்றும் 3 கிலோ சமையல் எண்ணெய் போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் சொன்னார்.

அந்த வணிக மையம் செல்லத்தக்க வர்த்தக லைசென்சை கொண்டிருந்த போதிலும் அதில் காணப்பட்ட முகவரியும் அந்த கட்டுப்படுத்தப்பட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்த இடமும் வேறுபட்டிருந்தது என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :