ECONOMYNATIONAL

ரொக்கமில்லா பரிவர்த்தனை நாட்டின் ஊழல் குறியீட்டை சீர் செய்ய உதவும்- நிபுணர் கருத்து

கோலாலம்பூர், ஜூலை 5- மலேசிய இலக்கவியல் முன்னெடுப்பின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பரந்த அளவிலான ரொக்கமில்லா பரிவர்த்தனை முறை நாட்டின் ஊழல் குறியீட்டை சீர் செய்வதற்குரிய வாய்ப்பினை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்.

ரொக்கமில்லா முறையின் கீழ் செய்யப்படும் அனைத்து பரிவர்த்தனைகளும் பதிவு செய்யப்படும் என்று மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் பொருளாதாரப் பள்ளியின் இணைப் பேராசிரியர் டாக்டர் அனுவார் ஷா பாலி முகமது கூறினார்.

பெரும்பாலும் லஞ்சம் கொடுப்போரும் பெறுவோரும் ரொக்கத்தைத்தான் பயன்படுத்துகின்றனர். ரொக்கப் பயன்பாடு இல்லாத பட்சத்தில் காகித வடிவிலான பண நோட்டுகளுக்கு தேவை இல்லாது போய்விடும்.

ரொக்கமில்லா பரிவர்த்தனை முறையை அனைத்து தரப்பினருக்கும் விரிவுபடுத்தும் பட்சத்தில் ஊழல் நடவடிக்கைகளும் காலப் போக்கில் கணிசமான அளவு குறைவதற்குரிய வாய்ப்பு உள்ளது என்று அவர் சொன்னார்.

பெர்னாமா டிவியில் இடம் பெற்ற “மலேசிய இலக்கவியல் திட்டம்- உலக இலக்கவியல் பொருளாதாரத்தின் உந்து சக்தி“ எனும் தலைப்பிலான விவாத நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தவிர, ரொக்கமில்லா பரிவர்த்தனை முறை வியாபாரிகள் மற்றும் பொது மக்களுக்கு பலனைத் தரும். இ-வாலெட் எனப்படும் மின் பணப்பை பதிவுகளை சோதிப்பதன் மூலம் விலை வேறுபாட்டை அவர்கள் அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.

பரிவுத் திட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக 100 வெள்ளி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :